2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடர், இன்று (ஜூலை 26) பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு துவங்கும் இந்த விழா, ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஜியோசினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
சுமார் 206 நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் இந்த துவக்க விழாவில் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக மைதானங்களில் ஒலிம்பிக் துவக்க விழா நடைபெற்று வந்த நிலையில், இம்முறை வித்தியாசமாக பாரிஸின் குறுக்கே ஓடும் செய்ன் நதியில் இந்த துவக்க விழா நடைபெறவுள்ளது. சுமார் 100 படகுகளில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.
இந்த துவக்க விழாவுக்கு முன்னதாக ஆடவர் மற்றும் மகளிருக்கான வில்வித்தை தரவரிசை சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இந்த தரவரிசை சுற்று ஆட்டங்களில், ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல மகளிர் பிரிவில் இந்தியா சார்பில் அங்கிதா பகத், பஜன் கவுர், தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.
முதலாவதாக நடைபெற்ற மகளிர் தரவரிசை சுற்று ஆட்டங்களில், இந்திய வீராங்கனைகள் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக அங்கிதா பகத் 666 புள்ளிகள் எடுத்து 11வது இடம் பிடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து, பஜன் கவுர் 659 புள்ளிகளுடன் 22வது இடத்தையும், தீபிகா குமாரி 658 புள்ளிகளுடன் 23வது இடத்தையும் பிடித்திருந்தனர்.
இதன்மூலம், இந்திய மகளிர் அணி 1983 புள்ளிகளுடன் தரவரிசையில் 4வது இடம் பிடித்து, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் vs நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், வெல்லும் அணியுடன் காலிறுதியில் இந்திய மகளிர் அணி மோதவுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான தகுதி சுற்று ஆட்டத்திலும், இந்திய அணி ஒரு அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, 681 புள்ளிகள் எடுத்து மிரட்டிய தீரஜ் பொம்மதேவரா தரவரிசையில் 4வது இடம் பிடித்தார்.
அவருடன் தருண்தீப் ராய் 674 புள்ளிகளுடன் 14வது இடத்தையும், பிரவின் ஜாதவ் 658 புள்ளிகளுடன் 39வது இடத்தையும் பிடிக்க, இந்திய ஆடவர் அணி 2013 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கொலம்பியா vs துருக்கி இடையிலான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், வெல்லும் அணியுடன் இந்தியா மோதவுள்ளது.
அதுமட்டுமின்றி, தரவரிசை சுற்று ஆட்டங்களில் அசத்திய தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத், கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேசியாவை சேர்ந்த தியானந்தா சொய்ருனிசா – ஆரிஃப் பங்கஸ்து இணையை எதிர்கொள்கிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
share market : வார இறுதி நாள்… உயர்வுடன் தொடங்கிய பங்கு சந்தை!
ராயன் முதல் சட்னி சாம்பார் வரை… இன்றைய ஓடிடி & தியேட்டர் ரிலீஸ்!
ஹெல்த் டிப்ஸ்: இளைஞர்களைத் தாக்கும் ஹார்ட் அட்டாக்: தவிர்ப்பது எப்படி?
