ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்துவும், மகளிருக்கான 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் லவ்லினாவும் முன்னேறியுள்ளனர்.
2024 ஒலிம்பிக் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை பி.வி.சிந்து. ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றில் மாலத்தீவைச் சேர்ந்த பாத்திமா அப்துல் ரஃபாக்கை 21 – 9, 21 – 6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து இன்று (ஜூலை 31) நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் குபாவை 21 – 5, 21 – 10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2020-ல் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற பி.வி.சிந்து, இந்த முறை தங்கப்பதக்கம் வெல்வார் என்று இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற லவ்லினா நார்வேயின் சன்னிவாவுடன் இன்று மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லவ்லினா, 5 – 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் சீனாவின் லி குயானை லவ்லினா எதிர்கொள்கிறார். 2020 ஒலிம்பிக் போட்டியில் லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டின் 5 கோடி… நேரில் வழங்கிய அமைச்சர் வேலு
கட்சியில் வீரமிகு பாண்டியன், ஆட்சியில் பத்தரை மாற்றுத் தங்கம்! – தங்கப்பாண்டியன் நினைவில் திமுக