2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில், ஹாக்கி ஆடவர் பிரிவில், ‘குரூப் பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, விளையாட்டிய 5 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
இதை தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில், துவக்கத்தில் இருந்தே 2 அணிகளும் மாறி மாறி எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
ஆட்டத்தின் முதல் பகுதியில், 2 அணிகளுமே எந்த கோலும் அடிக்காததால் 0-0 என போட்டி சமனில் இருந்தது.
இதை தொடர்ந்து துவங்கிய 2வது பகுதியின் துவக்கத்திலேயே, இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் எதிரணி வீரரை உள்நோக்கத்துடன் ஹாக்கி பேட்டை கொண்டு தாக்கியதாக ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே கிரேட் பிரிட்டன் பெனால்டி கார்னர் பெற்றபோதும், அதை கோலாக அந்த அணியால் மாற்ற முடியவில்லை.
தொடர்ந்து, பதில் தாக்குதல் நடத்திய இந்தியா 2வது பாதியிலேயே ஒரு பெனால்டி கார்னரை பெற்றது. அதில் ஹர்மன்ப்ரீத் சிங்கின் மின்னல் வேக ஷாட், இந்தியாவுக்கு 1-0 என முன்னிலையை பெற்றது.
2வது பாதிலேயே மீண்டும் ஒரு பெனால்டி கார்னரை தவறவிட்ட கிரேட் பிரிட்டனுக்கு, போட்டியின் 28வது நிமிடத்தில் லீ மார்ட்டின் ஒரு கோலை அடித்து 1-1 என ஆட்டத்தை சமன் செய்தார்.
தொடர் 2 அணிகளும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 4 பகுதிகள் முடிவிலும் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. குறிப்பாக 4வது பகுதியில் கிரேட் பிரிட்டன் தொடர் தாக்குதல்களை நிகழ்த்திய நிலையில், அதை இந்திய வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர்.
இதை தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி ஷூட்-அவுட் முறைக்கு எடுத்து செல்லப்பட்டது.
கிரேட் பிரிட்டனுக்காக முதல் ஷூட்-அவுட் ஷாட்டை அடித்த ஜேம்ஸ் பீட்டர் அல்பெரி, அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 1-1 என சமன் செய்தார்.
தங்கள் அணிகளுக்காக அடுத்த ஷூட்-அவுட்களை மேற்கொண்ட ஆண்ட்ரூ வாலஸ் மற்றும் சுக்ஜீத் சிங், தங்கள் ஷூட்-அவுட்களை கோல்களாக மாற்ற, 2-2 என ஷூட்-அவுட் சமனில் தொடர்ந்தது.
கிரேட் பிரிட்டனுக்காக அடுத்த ஷூட்-அவுட்களை மேற்கொள்ள வந்த கானர் வில்லியம்ஸ் மற்றும் பில் ரொபரை, இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சுவர் என அழைக்கப்படும் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தினார்.
இதை தொடர்ந்து, இந்தியாவுக்காக லலித் குமார் மற்றும் ராஜ் குமார் பால் ஆகியோர் தங்கள் ஷூட்-அவுட்களில் கோல் அடிக்க, இந்தியா 4-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அடுத்து, ஜெர்மனி – அர்ஜென்டினா இடையே நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், வெற்றி பெரும் அணியுடன் இந்தியா அரையிறுதியில் மோதவுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: பிரதமரிடம் அறிக்கை கொடுத்த கேரள அமைச்சர்!
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை!
2029லும் ஆட்சி அமைப்போம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா பதில்!
விமர்சனம் : நண்பன் ஒருவன் வந்த பிறகு!