Paris Olympics 2024: 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் களமிறங்கினார். இந்த முறை அவர் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருந்தது.
பளு தூக்குதல் போட்டி, ஸ்னேட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் என 2 பிரிவுகளாக நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு போட்டியாளருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதில் முதலாவதாக நடைபெற்ற ஸ்னேட்ச் சுற்றில், முதல் வாய்ப்பில் 85 கிலோ எடையை தூக்கிய மீராபாய் சானு, 3வது இடத்தை பிடித்தார்.
அந்த சுற்றில் 2வது வாய்ப்பில் 88 கிலோ எடையை தூக்க முயற்சித்து தோல்வியடைந்த மீராபாய் சானு, 3வது வாய்ப்பில் 88 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார்.
இந்த சுற்றின் முடிவில், ரோமானியாவின் வேலண்டினா மிஹேலா கம்பெய் 93 கிலோ எடையை தூக்கி முதலிடத்தில் இருந்தார். சீனாவின் ஷிஹுய் ஹோ 89 கிலோ எடையை தூக்கி 2வது இடத்தில் இருந்தார். மீராபாய் சானுவும், தாய்லாந்தின் சுரோத்சனா கம்போவும் 3வது இடத்தை பிடித்தனர்.
இதை தொடர்ந்து, கிளீன் & ஜெர்க் சுற்றில், முதல் வாய்ப்பில் 111 கிலோ எடையை தூக்க முயற்சித்து தோல்வியடைந்த மீராபாய் சானு, 2வது வாய்ப்பில் வெற்றிகரமாக அந்த எடையை தூக்கி 3வது இடத்திற்கு முன்னேறினார்.
ஆனால், ஸ்னேட்ச் சுற்றில் அவருடன் சமநிலையில் இருந்த சுரோத்சனா கம்போ, கிளீன் & ஜெர்க் பிரிவில் தனது 2வது வாய்ப்பில் 112 கிலோ எடையை தூக்கி, மீராபாய் சானுவை 4வது இடத்திற்கு தள்ளினார்.
இதை தொடர்ந்து, தனது கடைசி வாய்ப்பில் 114 கிலோ எடையை தூக்க முயன்று தோல்வியடைந்த மீராபாய் சானு, 2 பிரிவுகளிலும் சேர்த்து 199 கிலோ எடையை தூக்கி 4வது இடம் பிடித்தார்.
சுரோத்சனா கம்போ தனது கடைசி வாய்ப்பில் 114 கிலோ எடையை தூக்க முயன்று தோல்வியடைந்தாலும், 2 பிரிவுகளில் சேர்த்து 200 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஸ்னேட்ச் சுற்றில், 93 கிலோ எடையை தூக்கி முதலிடத்தில் இருந்த ரோமானியாவின் வேலண்டினா மிஹேலா, கிளீன் & ஜெர்க் சுற்றில் அதிகபட்சமாக 112 கிலோ எடையை தூக்கி, மொத்தம் 205 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர்களை தொடர்ந்து, கிளீன் & ஜெர்க் சுற்றில் 117 கிலோ எடையை தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்த சீனாவின் ஷிஹுய் ஹோ, மொத்தம் 206 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில், இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாலையே இல்லாத இடத்தில் கட்டப்பட்ட பாலம்: குழம்பும் கிராம மக்கள்!
“இனியும் போராட சக்தி இல்லை” : ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்
ஹெல்த் டிப்ஸ்: நடைப்பயிற்சி… நில் – கவனி – செல்!
Vinesh Phogat: வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு!