குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் அவசர சமயத்தின் போது பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது நன்றாக கவனித்துக்கொண்ட நம்மால், குழந்தை சற்று வளர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகு அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது. எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்துகொண்டே இருப்பது குழந்தைகளின் இயல்பு. அதேபோல சில சமயங்களில் தெரியாமல் எதையாவது விழுங்கிவிடவும் வாய்ப்புகள் உள்ளது. அண்மையில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன், மூச்சுக்குழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இந்த சூழலில் குழந்தைகளுக்கு ஏற்படும் அவசர நிலையின்போது பெற்றோர் எப்படி அதனை கையாள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
நாணயம் போன்ற பொருளை பொருட்களை விழுங்குதல்
குழந்தைகள் நாணயம், பட்டன் உள்பட எந்த பொருளையாவது விழுங்கினால், பெற்றோர்கள் பதட்டம் அடையக் கூடாது. சூழலை நிதானமாக குழந்தையை கையாள வேண்டும். பொருள் மூச்சு குழாய் வழியாக செல்லாமல் உணவுக் குழாய் வழியாக சென்றிருந்தால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். ஏனெனில் அது மலம் வழியாக வெளியே வந்துவிடும். 2 நாட்களில் நாணயம் மலம் வழியாக வெளியே வராவிட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
நாணயம் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் நாணயம் மூச்சுக் குழலில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. விழுங்கிய பொருள் எங்கே உள்ளது என்பது எக்ரே எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும். குழந்தை நாணயம் போன்ற பொருளை விழுங்கிவிட்டால் வாந்தி எடுக்க வற்புறுத்த வேண்டாம், வாழைப்பழம் உள்ளிட்ட ஏதாவது பொருளைக் கொடுத்து சாப்பிடவும் வற்புறுத்தக்கூடாது.
காய்ச்சலால் ஏற்படும் வலிப்பு (ஃபிட்ஸ்):
சில குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சல் இருக்கும் போது வலிப்பு ( ஃபிட்ஸ்) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், அப்படி வந்தால் பெற்றோர்கள் பயப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும். குழந்தையை ஒருக்களித்துப் படுக்க வைத்து, முதுகில் தேய்த்து விட வேண்டும். வாந்தி, இருமல் போன்று வந்தால் புரையேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 5- 10 நிமிடங்களில் வலிப்பு குறைந்து இயல்புக்கு வந்துவிடும். அப்படி இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுதல்
குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்தால் உடனடியாக கை, கால் தலை எந்த இடத்தில் அடி விழுந்ததோ அதை நன்றாக தேய்த்து விட வேண்டும். விழுந்த சிறிது நேரத்தில் அதுவே சரியாகிவிடும். அப்படி இல்லாமல் வாந்தி,மயக்கம், தலை சுற்றல்,நேராக குழந்தை நடக்க முடியாமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
திடீரென ஏற்படும் வயிற்று வலி
புதிய உணவை ஏதாவது அறிமுகம் செய்யும்போதும் அல்லது சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தாலோ குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும். இரவு நேரத்தில் குழந்தை வயிறு வலியால் அழுதால் பாரசிட்டாமல் சிரப்பை கொடுக்கலாம். மருந்து கொடுத்தும் தொடர்ந்து குழந்தை அழுது கொண்டு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
