இளம் பெண்ணை ரயில் முன் தள்ளிய கொலைக் குற்றவாளி சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 10) ரத்து செய்தது.
காதல் விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவி கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார். மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் சத்யாவின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். உடல்நலக் குறைவு காரணமாக சத்யாவின் தாயும் உயிரிழந்தார்.
இதனிடையே சத்யாவைக் கொலை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் பரிந்துரையின் பேரில் சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை 2022 நவம்பர் 4ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்தார்.
இந்நிலையில் தனக்கு எதிராக பதியப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “சட்ட விரோதமாகவும், அடிப்படை உரிமையை மீறியும், அவசரகதியில் குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளதாகவும், இது இயற்கை நீதிக்கு முரனானது” எனவும் தெரிவித்திருந்தார்.
சென்னை காவல் ஆணையரின் இயந்திரத்தனமான உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், ஒரு கொடூரமான சம்பவத்தைச் செய்துள்ள சதீஷுக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர், சிபிசிஐடி போலீசார் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்ற உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது,
சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 எனத் தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது முரணாக இருப்பதாகச் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.
இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்புகளில் குறிப்பிட்ட தேதிகளில் வேறுபாடு உள்ளதாகக் கூறிய நீதிபதிகள் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பிரியா
ஜூலை 14 ல் திமுக எம். பி. க்கள் கூட்டம்!
மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
![]()









