ADVERTISEMENT

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

Published On:

| By Kavi

தமிழகத்தை உலுக்கிய கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் , சத்யா என்ற கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். 

சதீஷும் சத்யப்பிரியாவும் காதலித்து வந்ததாகவும், பின்னர் பெற்றோரின் எதிர்ப்பால் சத்யப்பிரியா சதீஷ் உடன் பேசுவதை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்த ஆத்திரத்தில்தான் சத்யபிரியாவை சதீஷ் கொலை செய்துள்ளார். 

இது தொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த சூழலில் மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே சமயம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி சதீஷ் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு விசாரித்து வந்தது. 

அப்போது சதீஷ் சார்பில், தான் காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால் வேதனையிலும் ஆத்திரத்திலும் இவ்வாறு செய்துவிட்டார். இது திட்டமிட்ட கொலை அல்ல. எனவே தண்டனையை குறைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. 

சிபிசிஐடி சார்பில், சதீஷ் ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு மூன்றாவது நாள் ரயில் வரும் வரை காத்திருந்து ரயில் அருகில் வந்தவுடன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார் என்பதற்கு சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும் பிடிவாதம் மற்றும் ஆணாதிக்க உணர்வில் நடந்த கொடூரமான திட்டமிட்ட கொலை என்றும் அந்தப் பெண் தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் போது அதனால் காயமடைந்த ஒரு ஆணின் அகங்காரத்தால் நடந்த கொடூரமான கொலை என்றும் வாதிடப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். 

இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள் சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். 

மேலும் 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்தனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share