கடந்த மே 25-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது எங்கா மாகாணத்தை ஒட்டி அமைந்துள்ள 6 கிராமங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 670 என்று நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2000 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு பப்புவா நியூ கினியாவின் பேரிடர் மையம் அளித்துள்ள தகவலின்படி,
“பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
மே 24-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் எங்கா மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது முங்காலோ மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏராளமான வீடுகளும், அங்கு உறங்கிக்கொண்டிருந்த மக்களும் புதைந்து போனார்கள்.
இந்த நிலச்சரிவால் பல கட்டிடங்கள், தோட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போர்கெரா சுரங்கம் செல்லும் பிரதான நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. நிலச்சரிவு தொடர்ந்து வருவதால், அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் மீட்பு குழுவினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் என அரசின் அனைத்து துறைகளும் தொடர் மீட்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு குறித்து கேர் இண்டர்நேஷனல் என்ஜிஓ நிறுவனர் ஜஸ்டிஸ் மக்மஹோன் கூறும்போது, “நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. சிலரின் உடல்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. நிலத்தில் புதையுண்டவர்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளது.
அரசின் அனைத்து துறைகளும் நேரம் காலம் பார்க்காமல் முழுமையாக பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும். தொடர்ந்து நிலச்சரிவானது பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…