பண்ருட்டியில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா(80). இவரது கணவர் மாயவன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மறைவெய்தினார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பேர் உள்ளனர். மகளை விழுப்புரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார் கௌசல்யா.
தற்போது அவர், திராசு கிராமத்தில் உள்ள மகன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (ஜூன் 16) மாலை 3 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள சவுக்கு தோப்பு பகுதிக்கு சென்றார்.
பிறகு சிறிது நேரம் கழித்து ஆடை கிழிந்தவாறு நடக்க முடியாமல் வந்தவரை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பெருமாள், “என்னம்மா இப்படி போறீங்க… என்னாச்சு” என்று விசாரித்திருக்கிறார். அப்போது தன்னிடம் சிலர் தவறாக நடந்துகொண்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மூதாட்டியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தசூழலில் எஸ்.பி.ஜெயக்குமார் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டார். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையிலான தனிப்படை திராசு பகுதியில் விசாரணை மேற்கொண்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் யமாகா எப்.எக்ஸ் பைக் ஒன்று நின்றுள்ளது. அதை யார் பயன்படுத்தியது என்று தனிப்படை விசாரித்தது. இதுதவிர சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கம் கிராமத்தைச் சேர்ந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

இந்தசூழலில் அந்த பைக்கை மாளிகைமேடு அருகில் உள்ள எஸ்.கே.பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல்(22) கடந்த இரண்டு நாட்களாக பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த சுந்தரவேல் யார் என்று போலீசார் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், சுந்தரவேல் தான் மூதாட்டியை வன்கொடுமை செய்திருக்கிறார் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
இந்தநிலையில் புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் தனிப்படை சுந்தரவேலை பிடித்து கடலூருக்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில், சிப்காட் பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது, போலீசார் சுந்தரவேலின் இடதுகாலில் சுட்டிப்பிடித்தனர்.
இதையடுத்து சுந்தரவேல் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “புதுச்சேரி மாநிலம் திருப்புவனை பகுதியில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் கைதாகி மூன்று நாட்களுக்கு முன்பு, ஜூன் 14ஆம் தேதிதான் புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்தேன்.
சிறையில் இருந்து வெளியே வந்தபோதே புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தை திருடிகொண்டு வந்தேன்.
திராசு ரோட்டில் மதுபோதையில் உட்கார்ந்திருந்தேன். அப்போதுதான் அந்த மூதாட்டி அங்கு வந்தார். போதையில் என்ன செய்வதென தெரியாமல் தவறு செய்துவிட்டேன்.
போதையில் வண்டியை எங்கு விட்டேன் என்று தெரியவில்லை. அந்த பகுதியில் கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. அதை பிடித்துக்கொண்டு பண்ருட்டி சென்று விற்றுவிட்டு, அந்த பணத்தை வைத்து புதுச்சேரி சென்றுவிட்டேன்.
என் மீது விழுப்புரம், திருச்சி, ஈரோடு, மேட்டுப்பாளையம், புதுச்சேரி பகுதிகளில் வீடுபுகுந்து கொள்ளையடித்ததாக வழக்குகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.
சுந்தரவேல் குறித்து விழுப்புரம், ஈரோடு பகுதிகளில் போலீசார் விசாரித்த போது, வீடுகளில் திருட போகும் போது பெண்களிடமும் தவறாக நடந்துகொண்டிருக்கிறான். ஆனால் பெண்கள் யாரும் புகார் கொடுக்காததால் இவன் மீது திருட்டு வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். panruti old women harrasement case
பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த மூதாட்டி, குழப்பத்தோடு 4, 5 பேர் வந்தனர். அதில் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியிருக்கிறார்.
