பள்ளி விடுமுறையில் வீட்டில் வலம்வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் வகையில் இந்த பனீர் பக்கோடாவுக்கு சிறப்பிடம் உண்டு. உங்கள் வீட்டு டைனிங் அறையில் அமர்ந்து ‘இன்னும் கொஞ்சம் கொடுங்க… ப்ளீஸ்’ என்ற குரலை ஒலிக்கவைக்க இந்த பனீர் பக்கோடா உதவும்.
என்ன தேவை?
- பனீர் – 150 கிராம்
- கடலை மாவு – ஒரு கப்
- அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
- ஓமம் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)
- உப்பு – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனுடன் தேவையான தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் நறுக்கிவைத்துள்ள பனீர் துண்டுகளை முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இதை கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.