ADVERTISEMENT

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

Published On:

| By admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி டெல்லி சென்றவர், நேற்று (ஜூன் 25) இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். ஓபிஎஸ் விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி அமர்ந்து வெளியே வந்தபோது, மகளிரணிப் பெண்கள் அவரது அருகே திரண்டனர்.
‘ஐயா… எங்களை மன்னிச்சிடுங்க. நாங்களை உங்கள விட்டுட்டு அங்க போயிட்டோம். இப்ப நாங்க உங்கக்கிட்டயே வந்துட்டோம்’ என்று சொல்ல.,…மாஸ்க் அணிந்துகொண்டே சரி சரி சரி…. என்று சிரித்தார் பன்னீர்.

சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் அடுத்தடுத்து தனது ஆலோசனைகளைத் தொடர இருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளார்கள்.
“டெல்லி பயணத்தில் ஓரளவு திருப்தியாகத்தான் இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரது இப்போதைய உடனடி இலக்கு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தமிழ் மகன் உசேனால் அறிவிக்கப்பட்ட எடப்பாடி ஆதரவு பொதுக்குழுவை தடுக்க வேண்டும் என்பதுதான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏனென்றால் ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுப்படி முறையாக நடக்கவில்லை. அங்கே கலந்துகொண்டவர்கள் யாரும் முறையாக கையெழுத்து போட்டு பாஸ் வாங்கிக் கொண்டு உள்ளே செல்லவில்லை. போலி பாஸ்கள் மூலம் பொதுக் கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பது போல சேர்த்திருந்தார்கள். பொதுக்குழுவை நடத்தியதில் எடப்பாடியின் உறவினர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. இதுபற்றிய தகவல்களை எல்லாம் ஆதாரபூர்வமாக சேகரித்து, இந்த பொதுக்குழுவே செல்லாது என்றும், அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட அடுத்த பொதுக்குழுவை நடத்த தடை கேட்டும் சட்ட முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார் பன்னீர் செல்வம்.
இதற்கிடையில் தனது பழைய ஆதரவாளர்களை மீட்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் பன்னீர்.இதற்காக மீண்டும் தனது ஆலோசனையைத் தொடர இருக்கிறார்” என்கிறார்கள்.

-**வேந்தன்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share