ADVERTISEMENT

சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்!

Published On:

| By Guru Krishna Hari

‘அதிமுக சட்டமன்றக் குழுவை மாற்றி அமைக்கும்படி கடிதம் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்’ என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை வானகரத்தில் நேற்று (ஜூலை 11) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பொதுக்குழு, சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை என்பதால் அது செல்லாது என பன்னீர் அறிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து பன்னீர் உடனடியாகக் கடிதம் எழுதினார். இன்று (ஜூலை 12) அதிமுக கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கும் புதிய பொருளாளர் தேர்வு குறித்து கடிதம் எழுதினார். தற்போது, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பன்னீர்செல்வம்.

அந்தக் கடிதத்தில் ‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவினர் பொறுப்பில் உள்ளனர். அந்தப் பொறுப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு கொடுத்தால் அதை நிராகரிக்க வேண்டும். நேற்று (ஜூலை 11) நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு எந்த சட்டவிதிகளின்படியும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ADVERTISEMENT

இப்படி, அனைத்து தரப்புக்கும் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி சட்டரீதியான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கிவருகிறார், ஓ.பன்னீர்.

ஜெ.பிரகாஷ்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share