மழையின் காரணமாக காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயணம் தொடக்க விழா கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து உச்ச உயர் நீதிமன்றம் என சட்டப் போராட்டங்களை சந்தித்தும் அவரால் அதிமுகவை கைப்பற்றவோ அல்லது மீண்டும் கட்சியில் சேரவோ முடியவில்லை.
இந்த நிலையில், அவர் தனிக் கட்சி தொடங்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், பொறுத்திருங்கள் என்று கூறி அதற்கும் சஸ்பென்ஸ் வைத்தார் ஓ. பன்னீர்செல்வம்.
இந்த சூழலில் செப்டம்பர் 3ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனது புரட்சிப் பயணம் தொடங்கும் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்துக்காக காஞ்சிபுரத்தில் நாடாளுமன்றம் வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த பொதுக் கூட்டத்தை முன்னிட்டு அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில் அக்கட்சியினர் காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரனிடம் மனு கொடுத்தனர்.

இந்த சூழலில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ” அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தேன். தொடர்ந்து மற்ற தலைவர்களையும் சந்திப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அங்கு அண்ணா நினைவு இடத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்த வருகை பதிவேட்டில் ‘என்றும் அறிஞர் அண்ணாவின் தொண்டன்’ என்று எழுதி கையெழுத்திட்டார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். இதனிடையே அங்கு மழை பெய்ய தொடங்கியது.

கொட்டும் மழையில் பாதுகாவலர்கள் குடை பிடிக்க, அங்கு அமர்ந்திருந்தவர்களுக்கு கை கொடுத்தவாறு மேடைக்கு சென்றார் பன்னீர்செல்வம்.
தொண்டர்களும் குடை பிடித்தவாறு அமர்ந்திருந்தனர். சிலர் கூட்டமாக படுதாவை கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு மழையில் நனையாதவாறு நின்று கொண்டிருந்தனர்.
மேடையில் வைத்திலிங்கம் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். அதற்குள் அந்த பகுதியில் மழை அதிகரித்தது.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “குற்றாலத்தில் கூட வரிசையாக தான் குளிப்பார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானோர் குளித்த காட்சியை இன்று தான் பார்க்கிறோம்.

67 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தையும் மழையையும் நான் ஒன்றாக பார்த்ததில்லை.
நீங்கள் எல்லாம் அழைக்கப்பட்டீர்கள் ஆனால் அழைக்காமலே மழை வந்து விட்டது. எனவே இதே சீரோடும் சிறப்போடும் இன்னொரு நாள் இதே இடத்தில் பொதுக்கூட்டம் கூட்டப்படும். அன்றைய தினம் எல்லோரும் வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்து இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
பிரியா
உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் : மத்திய அமைச்சர்!
நெல்லை : திருமணத்துக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!
