தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற பனிமயமாதா திருக்கோவிலின் 441-ஆவது ஆண்டு தேர் திருவிழா இன்று (ஆகஸ்ட் 5) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி பனிமயமாதா திருக்கோவில் விழா ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், கல்வி மேலாண்மை, வியாபாரிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலி நடைபெறும்.
பனிமயமாதா திருக்கோவிலில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்க தேர் பவனி நடைபெறும். அந்தவகையில் தூத்துக்குடி மறை மாவட்ட நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டு தங்க தேர் பவனி நடைபெற்று வருகிறது. தேர் பவனியை கோவை மறை மாவட்ட பேராயர் தாமஸ் அக்குவினாஸ் துவங்கி வைத்தார்.
தேரானது சிலுவையார் கோவில் தெரு, ஜார்க் பீட்டர் தெரு, பெரிய கடை தெரு, சின்ன கோவில் கடற்கரை சாலை வழியாக கோவில் நிலையை மீண்டும் அடைகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிமயமாதா தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
