எருமாடு மணல் வயல் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் ஆடு, மாடுகளையும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய் பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளையும் வேட்டையாடி வரும் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு மணல் வயல் பகுதியில் வீடு ஒன்றின் தடுப்புச் சுவரை தாண்டி சென்ற சிறுத்தை, பதுங்கியபடி வீட்டிற்குள் சென்றது. பின்பு வளர்ப்பு நாயை கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தைக் கவ்வி வேட்டையாடி இழுத்துச் சென்றது.
இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மணல் வயல் கிராமப் பகுதியில் செல்ல பிராணிகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
