ஹைப்பர் மார்க்கெட்டுகளில் நிறைய வாங்கினால் குறைவான விலையில் கிடைக்கும் பொருட்களில் பாஸ்தாவும் ஒன்று. அவ்வளவு பாஸ்தா வாங்கி என்ன செய்வது என்று யோசிக்கலாம். ஆனால், பாஸ்தாவை அடிப்படையாக வைத்து பலவித உணவுகளை செய்து அசத்தலாம். அவற்றில் ஹெல்த்தியான ஒன்றுதான் இந்த பனீர் மக்கானி பாஸ்தா ரெசிப்பி.
என்ன தேவை?
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பாஸ்தா – 200 கிராம்
வெங்காயம் – 3
தக்காளி – 3
பிரியாணி இலை – ஒன்று
முந்திரி – 5
பூண்டு – 5 பல்
இஞ்சி – 2 அங்குலத் துண்டு
பனீர் – 100 கிராம்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
வெண்ணெய் – 50 கிராம்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கசூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்
உப்பு, ஃபிரெஷ் க்ரீம் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தண்ணீரில் பாஸ்தா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து ஆறு நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
வேறொரு கடாயில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் முந்திரி, நசுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, 10 -15 நிமிடங்கள் அதிக தீயில் வேகவைத்துக்கொள்ளவும்.
பின்னர் வேகவைத்த பொருட்கள் ஆறியதும், அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், அரைத்த மசாலாவைச் சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதில் ஃபிரெஷ் க்ரீம், கசூரி மேத்தி, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கிரேவியுடன் நன்றாக சேருமாறு கலந்தால் சுவையான பனீர் மக்கானி பாஸ்தா தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
