இந்தியாவில் பல மாநிலங்களில் பல வகையான உணவுகள். ஒரு மாநிலத்து உணவு மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பிடிக்கும் என்பது சந்தேகம்தான். ஆனால், எல்லா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் இந்த பனீர் பிங்கர்ஸ். நீங்களும் விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குச் செய்து கொடுத்து மகிழ்விக்கலாம்.
என்ன தேவை?
- பனீர் – 100 கிராம்
- மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
- கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்
- பிரெட் க்ரம்ஸ் (பிரெட் துகள்கள்) – 4 டேபிள்ஸ்பூன்
- உப்பு – அரை டீஸ்பூன்
- ரீபைண்டு ஆயில் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பனீரை சிறிய நீளமான வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிடவும். கார்ன்ப்ளார் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியான மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் ஊறிய பன்னீர் வில்லைகளைத் தோய்த்து, பிரெட் துகள்களில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.