வீட்டிலிருந்தாலும் சரி; அலுவலகத்திலிருந்தாலும் சரி… பணி சுமைகளுக்கிடையே ஓர் அலுப்பு ஏற்படும். காபியோ, டீயோ குடித்தால் மனசுக்கு இதமாக இருக்கும் என்று தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் காபி, டீயைத் தவிர்த்து இந்த பனீர் பைட்ஸ் சாப்பிடுங்கள். மனத்துக்கு இதமளிக்கும். புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
**எப்படிச் செய்வது?**
200 கிராம் பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஓர் அகலமான தட்டில் கால் கப் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் சாட் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பனீர் துண்டுகளை இந்தக் கலவையில் நன்கு புரட்டிக்கொள்ளவும். ஓர் இரும்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி சூடாக்கவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்து பனீர் துண்டுகளைத் தோசைக்கல்லில் சேர்த்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு வறுக்கவும். பனீர் லேசாக நிறம் மாறும்போது மெதுவாகத் திருப்பிக்கொண்டே இருக்கவும். நான்கு பக்கங்களிலும் பொன்னிறமாக மாறியதும் ஒரு தட்டுக்கு மாற்றிக்கொள்ளவும். சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.
**சிறப்பு**
பனீரில் இருக்கும் புரோட்டீன் சத்தானது உடலில் உள்ள தசைகளுக்கு வலிமை சேர்க்கும். பனீரை அதிகமான எண்ணெயில் பொரித்தால் அதன் சத்துகள் அழிந்துவிடும். அதற்குப் பதிலாகச் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தோசைக்கல்லில் வறுத்து எடுத்தால், வீட்டிலேயே ஆரோக்கியமான நொறுக்ஸ் தயார்.
