முனைவர் க.சுபாஷிணி
இந்த ஆண்டு பிப்ரவரி. நான் சென்னையில் விடுமுறைக்கு வந்திருந்த நேரம்.
ஜெர்மனிக்குத் திரும்பிச்செல்வதற்காக 11ஆம் தேதி காலைக்கான விமான டிக்கெட் பதிவு செய்திருந்தேன். பிப்ரவரி 6ஆம் தேதி ஜெர்மனியிலிருந்து எனது அலுவலகத் தோழர் ஸ்கைப் வழியாக அழைத்து, முடிந்தால் விரைந்து விமான டிக்கெட்டை மாற்றிக்கொண்டு முன்னரே வந்து விடுவது நல்லது எனக் கூறி, அநேகமாக ஜெர்மனி, ஆசிய நாடுகளுக்கான தனது விமானப் போக்குவரத்துகளை நிறுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.
அதே நாள் ஸ்வீடனிலிருந்து இங்கு நீண்ட விடுமுறைக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் இரவு திடீரென்று என்னை தொலைபேசியில் அழைத்து, தான் சென்னை விமான நிலையம் சென்று கொண்டிருப்பதாகவும், முடிந்தால் விரைந்து சென்னையிலிருந்து கிளம்பவும் என்று திகிலைக் கிளப்பி விட்டார். மனத்தில் அச்சம் அதிகரிக்கத்தொடங்கினாலும், சரி, மறுநாள் ஜெர்மனி தூதரகத்துக்குத் தொலைபேசியில் அழைத்தும் கேட்டுவிட்டு பின்னர் முடிவு செய்வோம் என அமைதியானேன்.
மறுநாள் சென்னையிலுள்ள ஜெர்மனி தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததில், இன்னமும் விமானப் போக்குவரத்தில் தடைகள் ஏற்படவில்லை என்றும், அப்படி அறிவிப்பு வந்தால் தெரியப்படுத்துவதாகவும் சொல்லி விட்டனர். நான் திட்டமிட்டபடியே பிப்ரவரி 11ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஜெர்மனி வந்தடைந்தேன். ஃப்ராங்க்பர்ட் விமான நிலையம் வந்தடைந்தபோது அங்கு கொரோனா பரிசோதனை எதையும் எனக்கு அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
மார்ச் மாதம் 11ஆம் தேதி. ஜெர்மனி போப்லிங்கன் நகரில் உள்ள எனது அலுவலகத்துக்குக் காலையில் சென்று அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய ஒன்பது மணி வாக்கில் ஒரு செய்தி ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி பகுதியின் நிர்வாக இயக்குநரின் செயலாளர் ஒவ்வோர் அலுவலகமாக வந்து எங்கள் ஒவ்வொருவருக்கும், முதல் நாள் எங்கள் அலுவலக ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதால் அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறி உடனே நாங்கள் அனைவரும் அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அன்று தொடங்கியது ஜெர்மனியில் எனது ஊரடங்கு அனுபவம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் Covid-19 வைரஸ் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஜெர்மனி. சீனாவில் பெருமளவு பாதிக்கப்பட்ட செய்தி ஐரோப்பாவில் அதன் முழு வீச்சுடன் ஆழமாக உள்வாங்கப்படுவதற்கு முன்னதாகவே ஐரோப்பாவின் சொர்க்கபுரியான இத்தாலியில் அதி விரைவாகத் தொற்று பரவத்தொடங்கியது. என்ன நடக்கின்றது என இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறும் ஏனைய நாடுகளும் யோசித்து புரிந்து கொள்வதற்கு முன்பே மார்ச் மாதம் இத்தாலியை Covid-19 வைரஸ் கொள்ளைநோய் பற்றிக்கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறும் நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்து மிக அதிகமாக இந்தக் கொள்ளை நோய் பரவிய நாடாக அறியப்படுவது ஜெர்மனி. மார்ச் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை ஜெர்மனி தனது அண்டை நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளுடனான எல்லையை மூடியது. அதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு நாளும் இறுக்கமான ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொற்று மிக அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்டாலும் இந்தக் கொள்ளை நோயை எதிர்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விதம், மற்றும் ஏனைய அண்டை நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கிய விதம் என்று இரண்டு கோணங்களில் ஜெர்மனி இந்த விஷயத்தில் தனித்து நிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள உறுப்பு நாடுகள் உடனுக்குடன் நிலைமையை அறிந்து ஊரடங்கைப் பிரகடனப்படுத்தத் தொடங்கிய காலகட்டத்தில், இதன் வீச்சு அறியாமல் இருந்த நாடு இங்கிலாந்து. தாமதமாக அங்குச் செயல்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கைகள் இன்று வரை தொடர்ச்சியாக பெரும் சேதத்தை இங்கிலாந்து முழுமைக்கும் வழங்கத் தவறவில்லை.
SARS-Cov-2 வகை வைரஸ் ஏற்படுத்துகின்ற கொள்ளை நோயின் பாதிப்பு முதலில் சீனாவின் ஹூபே மாநிலத்திலே இருக்கின்ற வூகான் நகரில் தான் அறியப்பட்டது. 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்த நோய் அறியப்பட்டது. படிப்படியாக பல நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பின்னர் உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி இந்த நோயைத் தொற்று நோயாகப் பிரகடனப்படுத்தியது. நாம் அறியாமலேயே நமது அன்றாட வாழ்க்கையில், நொடிக்கு நொடி, ஏராளமான பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தாக்கத்துக்கு நாம் உள்ளாகிறோம். இந்தத் தாக்கத்தைச் சமாளிக்கவே உலக அளவில் ஆயிரக்கணக்கான சோதனைகள் ஆய்வுக்கூடங்களிலும் மருத்துவமனைகளிலும் நடத்தப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்த மருந்துகளில் பல, நோய்க் கிருமிகளால் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுகின்றன; பல சோதனைகள் தோல்வியிலும் முடிகின்றன. உலக நாடுகள் அனைத்துமே இன்றைக்கு நோய்க் கிருமிகள் பற்றிய சோதனை, மருந்து உற்பத்தி, மருந்து சோதனைகள் எனப் பெரிய அளவில் ஈடுபட்டிருக்கின்றன. ஒரு வகையில், மருந்துகள் தயாரிப்பு, மருந்துகள் விநியோகம் என்பது உலக அளவில் மாபெரும் ஒரு வியாபாரமாகவும் இன்று மாறி விட்டது .
கொள்ளை நோயினால் ஏற்படும் பேரிடர் பாதிப்பு என்பது ஐரோப்பாவுக்குப் புதிதல்ல. வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி கி.மு 4இல் கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் கொள்ளை நோயின் பிடியில் சிக்கியது. லிபியாவிலிருந்து எத்தியோப்பியா வந்து பின்னர் எகிப்தில் நடைபெற்ற போர் காலத்தில் இந்த நோய் பரவியது. கிரேக்கப் பேரரசின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள்தொகை இந்தக் கொள்ளை நோயால் பலியானது.

இதற்கடுத்து கி.பி 165 அந்தோயின் பிளேக் (Antonine Plague) எனப்படும் கொள்ளை நோய் ரோமானியப் பேரரசின் ஆட்சி இருந்த ஜெர்மானிய நிலப்பகுதியில் பரவியது. போர் முடித்து ரோம் நகருக்குத் திரும்பிய போர் வீரர்கள் வழி ரோமானியப் பேரரசு முழுமைக்கும் இந்தக் கொள்ளை நோய் பரவியது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் இந்தக் கொள்ளை நோயின் தாக்கம் ரோமானியப் பேரரசை முற்றுகையிட்டிருந்தது. பேரரசர் மார்க்குஸ் அரேலியஸ் (Marcus Aurelius) இறப்புக்கும் இந்தக் கொள்ளை நோயே காரணமானது.
இதனையடுத்து கி.பி 250இல் ஐரோப்பாவைத் தாக்கியது கைப்ரியன் பிளேக் (Cyprian Plague). எத்தியோப்பியாவிலிருந்து வட ஆப்பிரிக்கா வரை பரவி பின்னர் ரோமானியப் பேரரசில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்தக் கொள்ளை நோய். இதனையடுத்து கிபி 541இல் மத்திய ஐரோப்பாவைத் தாக்கியது ஜஸ்டினியன் ப்ளேக் (Justinian Plague). தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகள் இந்த நோயின் தாக்கம் இருந்தது. 50 மில்லியன் மக்கள் இந்தக் கொள்ளை நோய் காலத்தில் உயிரிழந்தார்கள். ஐரோப்பாவில் ஏற்பட்ட இந்தப் பேரிடரால் உலக மக்கள்தொகையில் 26 விழுக்காடு மக்கள் பலியான காலகட்டமிது.

கி.பி 11ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்கு மீண்டும் பெரும் சவால் ஏற்படுத்திய காலம். வரலாற்றில் நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு நோய்தான் தொழுநோய் என்றாலும், இந்தக் காலகட்டத்தில் ஒரு கொள்ளை நோய் போல தொழுநோய் பரவியது ஐரோப்பாவில். இதனையடுத்து ஐரோப்பாவைக் கலங்க வைத்தது கிபி 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவைத் தாக்கிய பிளேக் டெத் (1350 The Black Death).
கி.பி 14ஆம் நூற்றாண்டு இத்தாலிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் இருண்ட காலம்தான். மிகப்பெரிய மனிதகுல பேரிடரை இத்தாலியும் ஐரோப்பாவும் இக்காலகட்டத்தில் சந்தித்தன. உடலில் கட்டிகள் உருவாகி உடம்பையே சீரழித்து மனிதர்களைக் கொல்லக்கூடிய நோய் இது என்பதால் இந்த நோய்க்கு Bubonic Plague என்று மற்றொரு பெயரும் உண்டு.
இந்த நோய் 1347ஆம் ஆண்டு தொடங்கி 1353ஆம் ஆண்டு வரை, ஏழு ஆண்டுகள், ஐரோப்பா முழுமைக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு மூல காரணமாக அமைந்தது யெர்சீனூஸ் பெஸ்டிஸ் என்ற ஒரு பாக்டீரியா. வரலாற்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் இதை ஒரு வகை எலிதான் பரப்பியது எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு சிலரோ ஒரு வகை உன்னி போன்ற பூச்சி வகை ஒன்றினால் பரவியது என்றும் குறிப்பிடுகின்றனர். எது உண்மையாகினும் பாதிப்பும் பேரிழப்பும் பெரிது என்பதில் மாற்றமில்லை.

கி.பி 14ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்த Black Death பேரழிவினை ஏற்படுத்திய இந்த பாக்டீரியாவும்கூட, சீனாவிலிருந்துதான் வந்தது எனத் தெரிகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற, வணிகர்கள் வந்து போகும் நில வழிப்பாதை சில்க் ரோடு. தமிழில் இதைப் பட்டுப்பாதை என்று அழைப்போம். அந்த பட்டுப்பாதை வழியே சீனாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கு, அதாவது இன்றைய இந்தியாவின் வடக்கு மலைப்பகுதி, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக வணிகர்கள் வரும் பாதை வழியாக இத்தாலிக்கு வணிகர்கள் வழி பரவியதாக ஆவணக் குறிப்புகள் சொல்கின்றன. இத்தாலியின் தெற்கில் இருக்கும் ஒரு தீவு சிசிலியன். எப்போதுமே சுற்றுலாப் பயணிகளும் வணிகர்களும் நிரம்பியிருக்கிற ஒரு தீவு இது.
மத்திய ஆசியாவிலிருந்து வந்து பிறகு கடல் வழி இந்தத் தீவுக்கு 1347ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கப்பலில் வந்த வணிகர்களுக்கு இந்த நோய் பரவியிருந்ததாகவும், அவர்களிடமிருந்து இத்தாலிக்குப் பரவத் தொடங்கி, இரண்டே ஆண்டுகளுக்குள் ஐரோப்பா முழுமையும் பரவி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கேண்டினேவியன் நாடுகள் என எல்லா பகுதிகளிலும் இந்த நோய் பரவியது.
இந்த நோய் மிகச் சுலபமாக பக்கத்தில் இருப்பவருக்குப் பரவிவிடும் தன்மை கொண்டதாக இருந்தது. இந்த நோயுள்ளவர் அணிந்த ஆடைகளை மற்றொருவர் அணிவது, மிக அருகே நின்று பேசுவது, நெருக்கமாக நிற்பது, தொடுதல் போன்ற வகையில்தான் இந்த நோய் விரைவில் பரவத் தொடங்கியது. குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், ஆண்கள் பெண்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் இந்த நோய் பரவியது.
இந்த நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றே தெரியாத வகையில் மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளானார்கள். இந்த நேரத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையான வாடிக்கனின் தலைமையகம் வாடிக்கனிலிருந்து உள்நாட்டு சர்ச்சையின் காரணமாக பிரான்சின் அவியோன் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. அப்போது தலைமைப்பதவியில் இருந்தவர் போப் 6ஆம் கிளமென்ட். இவர்தான் அப்போது இந்த ப்ளேக் நோயினால் இறந்த எல்லா மக்களுக்குமான பாவ மன்னிப்பு சடங்கைச் செய்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளியன்று புனித போப் அவர்கள் புனித வெள்ளி பொதுமக்களுக்கான பூஜைகள் வாடிக்கனில் நடைபெறாது என்று அறிவித்ததோடு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்து வாடிக்கன் திருச்சபைக்கு வரக் கூடாது என்றும் வழிபாடு போப் அவர்களால் தனிமையில் நடத்தப்படும் என அறிவித்து அதையே செய்தும் காட்டினார். ஏறக்குறை ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரலாறு மீண்டும் அதே நிகழ்வைச் சந்தித்திருக்கிறது, கொரோனா கொள்ளை நோயினால்.
கி.பி 14ஆம் நூற்றாண்டு காலகட்டம் ஐரோப்பாவின் இருண்ட காலகட்டமாகத்தான் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இத்தாலி தான் அப்போது மிகுந்த பாதிப்புக்குள்ளானது. ஐரோப்பாவிலே 30இல் இருந்து 60 விழுக்காடு மக்கள்தொகை இந்த ப்ளேக் நோயினால் அந்த நேரத்தில் இறந்தனர். அதிலும் இத்தாலியின் ப்ளோரன்ஸ், வெனிஸ் ஆகிய நகரங்களில் மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் இந்த நோயினால் இறந்தனர். வெனிஸில் மட்டுமே 60%க்கும் மேல் இறந்தனர்.
இந்தக் காலகட்டத்திலே உயிர் தப்பிய எழுத்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் அப்போது நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளனர். மருத்துவர்கள்கூட நோயாளிகளைக் கண்டு அஞ்சி மறைந்து கொண்டதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்குள்கூட அச்சத்தினால் ஒருவருக்கு ஒருவர் தங்களைத் தனிமைபடுத்திக் கொண்டதாகவும், யாருக்கு இந்த நோய் இருக்குமோ என்பது தெரியாத சூழலில் மக்கள் தனித்தனியாக தங்களைத் தனி அறைகளுக்குள் அடைத்துக்கொண்டதாகவும், இக்காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கு ஆகியவை நிலை குலைந்து போனதாகவும் அப்போதைய ஆவணக்குறிப்புகள் கூறுகின்றன.
உதாரணமாக, அக்காலகட்டத்தில் வாழ்ந்த எழுத்தாளர் தான் ஜியோவானி பொக்காசியோ (Giovanni Boccaccio 1313–1375) எழுதிய தி டெசிமெரோன் (The Decameron) என்ற நூல் இந்த நோய் பற்றிய பல தகவல்களை நமக்கு கதை வடிவிலே சொல்கிறது. இது நூறு கதைகளைக் கொண்ட ஒரு நூல். இந்த நோய், வீரியத்துடன் தாக்கிய ஃப்ளோரன்ஸ் நகரத்திலிருந்து ஏழு பெண்களும் மூன்று ஆண்களும் ப்ளேக் நோய் தாக்கத்திலேயிருந்து தப்பித்து வந்ததைப் பற்றி இந்த ஒவ்வொரு கதைகளும் சொல்கின்றன. இந்த நோய் தாக்கம் இருந்த நீண்ட காலத்துக்குப் பிறகு, சென்ற நூற்றாண்டில் இத்தாலியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த மனித எலும்புக்கூடுகளை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து இதன் பாதிப்புகளைப் பற்றிய ஆய்வுத் தகவல்களைப் பத்திரிகைகளும் வெளியிட்டன.

15ஆம் நூற்றாண்டு ஓவியங்கள் பல இந்த ப்ளேக் டெத் பற்றிய கருப்பொருளை மையமாகக்கொண்டும் அக்காலத்தில் உருவாக்கப்பட்டன. ஓவியங்கள் மிக உயிரோட்டத்துடன் நோய் ஏற்படுத்திய உடல் வலியையும், சொர்க்கம் – நரகம் என்ற சிந்தனையையும், மதக் கோட்பாடுகளையும் வெளிப்படுத்தின. இத்தாலியின் சியேன்னா நகரின் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர் அம்ப்ரொஜியோ லோரென்செட்டி, பியத்ரோ லோரென்செட்டி போன்றவர்களது ஓவியங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்த காலகட்டம் அது. அதனால் மக்கள் இந்த நோய் கடவுள் கொடுத்த ஒரு தண்டனை என்று எண்ணி தம்மைத்தாமே தண்டித்துக்கொண்டும் இறந்து போயினர். எப்படி இந்த நோய் பரவியது, ஏன் மக்கள் இறக்கின்றனர் என்ற காரணம் தெரியாமலேயே துன்பப்பட்டே பலர் இறந்து போயினர். ஆனால், இன்று அறிவியல் சாதனங்கள், மருத்துவ மேம்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள், அரசுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்தும் அமைந்திருக்கின்றன. கொரோனா கொள்ளை நோய் வைரஸ் நுண்கிருமிகளாலே பரப்பப்படுகிறது என்று தெரிகிறது. மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கையைச் சரியாக மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த நுண்கிருமியின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அறிவியல் நமக்கு வழிகாட்டுகிறது.
கொரோனா தொற்று அறியப்பட்ட நாளிலிருந்து ஜெர்மனி மிகப் பெருமளவில் சோதனைகளை மேற்கொண்டது. எல்லைப்பகுதியிலிருந்து ஜெர்மனிக்குள் வருகின்ற ஒவ்வொரு வாகனத்தில் உள்ள பயணிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பெருமளவில் பொதுமக்கள் சோதனைகள் செய்து கொண்டனர். இன்றைய நிலவரப்படி ஜெர்மனியில் கொரோனா பாசிட்டிவ் என அறியப்பட்டோரின் எண்ணிக்கை 163,860 நபர்கள்; இறந்தவர்கள் எண்ணிக்கை 6,831; இதில் நோய்த் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் 137,400 நபர்கள். கொரோனா கொள்ளை நோயை எதிர்கொள்ள ஜெர்மனி கடந்த வாரங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஐரோப்பாவில் இது தொடர்பான நிகழ்வுகளைப் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்.
கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.