ஆர்எஸ்எஸ் பிள்ளையை தத்தெடுப்பதா ? திருமாவளவன் மீதான பனையூர் பாபுவின் குற்றச்சாட்டுகள் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தவெக அமைச்சரவையில் வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவால் அதிருப்தியில் இருந்த செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகி விலகுவதாக அறிவித்துள்ளார்.

திருமா மீது பனையூர் பாபு முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள்

  • சமீப காலங்களாக விசிக தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் (Facebook Live) முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது.
  • நேற்று வரை ஒரு நடிகரை ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
  • “விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்” என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சம்
  • ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், “மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது” என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று நாம் பயணித்துக் கொண்டிருப்பது அந்த அபாயகரமான திசையில்தான் என அஞ்சுகிறேன்.
  • கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நான் கட்சியிலிருந்து விலகினாலும், அண்ணன் எழுச்சித்தமிழர் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்.. நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறி மீறி பாய்தல் தீரம்”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share