பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாக பான் கார்டு கருதப்படுகிறது. நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு பான் அட்டை பயன்பாடு அத்தியாவசியமாகிறது.
இந்த நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய பான் 2.0 அட்டையை ரூ.1,435 கோடி செலவில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி விரைவில் பான் 2.0 அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த அட்டையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன? அதை எப்படி பெறுவது என்பதை இங்கு காண்போம்.
புதிய பான் அட்டையில் முக்கிய அம்சமாக தரவுகளை உள்ளடக்கிய கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், விரைவான சேவையை பெறுதல், தரவுகளின் பாதுகாப்பு மற்றும் உண்மைத்தன்மை என புதிய பான் அட்டையின் பல்வேறு பயன்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “நாடு முழுவதும் தற்போது 78 கோடி பான் கார்டுகள் அமலில் உள்ளது. அவற்றில் 98% பான் கார்டுகள் தனி நபர்களுடையது. காகிதமின்றி முற்றிலும் ஆன்லைனில் பிரத்யேக இணையதளம் மூலம் புதிய பான் 2.0 அட்டையை வழங்கப்பட உள்ளது. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த மையமாக இது இருக்கும்.
பயனாளரின் பான் எண் மாறாததால், பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா என்பதை பற்றி கவலையடைய தேவையில்லை. புதிய பான் அட்டை இலவசமாக வழங்கப்படும். பயனார் அவர்களது இல்லத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா