’பம்பரம்’ சின்னம் : தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு… வைகோ ரியாக்சன்!

Published On:

| By christopher

Pamparam symbol vaiko reaction

மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 1) உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில்,வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “மதிமுக 1996-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீதம் பெற்றதாக கூறி எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

அதன்பிறகு, 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் மக்களவை தேர்தலிலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளோம். அதன்படி எங்கள் கட்சிக்கே பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல் கான், “மக்களவைக்கான தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். எனவே விரைந்து மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் கோபாலன், இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்குமாறு கோரினார்.

இதனையடுத்து, “மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பிரிவின் கீழ் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற அமர்வு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தகுதியை தக்க வைத்து கொள்ளவே கேட்கிறோம்!

இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவாலயத்தில் நேரில் சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலில் தொடர்ந்து தனிச் சின்னத்தில் நின்றால் தான் அதனை தக்க வைக்க முடியும். எனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைத்து கொள்வதற்காகவே நாங்கள் பம்பரம் சின்னம் வேண்டும் என்று கேட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிற்ஸ்டோபர் ஜெமா

’அதை தவிர வேறு எந்த பலனும் இல்லை’ : அமீர் விளக்கம்!

சின்னத்திரை டூ வெள்ளித்திரை: ரக்‌ஷிதா மகாலட்சுமியின் ‘அடுத்த’ பயணம்!

இது திராவிட மண்..தைரியமிருந்தா நிர்மலா சீதாராமனை தேர்தலில் நிற்க சொல்லுங்க – பொங்கிய கே.பி.முனுசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share