வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ராமஸ்வரம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். இந்தநிலையில், மோடி வருகையை முன்னிட்டு பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Pamban Mosque covered tarpaulin
இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் ரஹீம், “பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை ஒட்டி பாம்பன் பள்ளிவாசல் மினாராவின் எழுத்துக்களை தார்ப்பாய் போட்டு மறைக்கும் பணியை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே அந்த மினாராவில் அல்லாஹு அக்பர் என்று பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை நீக்க வேண்டும் என கூறிய மாவட்ட காவல்துறை அதற்காக ஏதேதோ காரணங்களை சொல்லி வந்தது. ஆனால், இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்துள்ளது.
பாஜகவை திருப்திப்படுத்தும் நோக்கில் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இஸ்லாமிய வெறுப்பு செயல் திட்டம் தான் இதன் பின்னணியில் உள்ளது என்பது தெளிவாகிவிட்டது. ராமநவமி ஊர்வலங்களுக்காக வடமாநிலங்களில் பள்ளிவாசல்கள் அனைத்தும் தார்ப்பாயிட்டு போர்த்தப்பட்ட சம்பவத்தை இது நினைவு படுத்துகிறது.
ராமேஸ்வரம் வரும் மோடி பாம்பன் பள்ளிவாசல் மினாராவையும் அதில் பொறிக்கப்பட்டு இருக்கும் அல்லாஹு அக்பர் என்ற வாசகத்தையும் பார்க்கட்டுமே? பாம்பன் தீவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று பார்த்து வெட்கி தலை குனியட்டுமே? இதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சனை?
பாசிசவாதிகளின் கண்களை பள்ளிவாசல்கள் உறுத்தலாம்? திராவிட மாடல் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தலாமா?
இது தமிழ்நாடா அல்லது பாஜக ஆளும் வடமாநிலமா என்று புரியாத அளவிற்கு திராவிட மாடல் திமுக ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கிறது. சட்டமன்றத்தில் வக்ஃப் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து வரும் முதல்வர் ஸ்டாலின், பள்ளிவாசலில் தார்ப்பாய் கொண்டு மூடுப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயல்” என்று தெரிவித்துள்ளார். Pamban Mosque covered tarpaulin