விதிகளை மீறி மோசமாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் : சு.வெங்கடேசன் கண்டனம்!

Published On:

| By Minnambalam Login1

புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் தரம் மிக மோசமாக உள்ளதை கண்டித்து எம்பி சு.வெங்கடேசன் இன்று (நவம்பர் 28) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து டவுனான மண்டபத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைப்பதற்காக 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம்.

இந்த பாலம் பழுதடைந்து வந்ததால், புதிய பாலத்தை கட்ட இந்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.280 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டிருந்த பாலப் பணிகள், கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போனது.

பின்னர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து இதை ஆய்வு செய்வதற்காக ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர் ஏ.எம். சௌதரி நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் 13 மற்றும் 14 பாம்பன் ரயில் பாலத்தை அவர் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நவம்பர் 26ஆம் தேதி அவர் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் பல குறைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தின் திட்டமிடலிலிருந்தே பல பிரச்சினைகள் உள்ளன. கட்டுமானத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த ரயில் பாலம் இப்போதே துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.  பல இடங்களில் உள்ள போல்ட்டுகள் தேவையான அளவை விட சிறியதாக இருக்கின்றன எனப் பல குறைபாடுகளை ஏ.எம் சௌத்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Image

இந்த ரயில் பாதை, கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக செங்குத்தாகத் திறக்கும் வடிவில் கட்டப்பட்டுள்ளதால், அதை இயக்குவதற்கான செயல்முறையை பாம்பன் ஸ்டேஷன் மாஸ்டருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் அங்கு பணிபுரியும் “பாயிண்ட் வுமன்” ரயில் ஊழியர்களுக்கும் புதிய பாலம் இயங்கும் முறை பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் ஏ.ம்.சௌதரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும்

இந்த நிலையில் தரம் குறைவாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தைப் பற்றி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ” பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் .

பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்குப் பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை ரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர்டிஎஸ்ஓ தன் கடமையைக் கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

pamban bridge su venkatesan

இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்த காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்க வில்லை .

ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிர்ஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார். அது மட்டுமல்ல பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர்டிஎஸ்ஓ-வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது.

இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக்காட்டிய பின் 18. 10. 24இல் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தைப் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும்.

இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

எஸ்.பி.பி-யின் ஏஐ குரலை பயன்படுத்த சரண் தடை: காரணம் என்ன?

ரூ.1.20 லட்சம் சம்பளம், ஆனால் அரசு வேலை இல்லை… மணப்பெண் எடுத்த விபரீத முடிவு !4

வயநாடு எம்.பி-யாக பதவியேற்ற பிரியங்கா… குரூப் போட்டோ எடுத்த ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share