மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பு எப்போது கிடைக்கும்?: உணவுத் துறை அறிக்கை!

Published On:

| By indhu

Palm oil to be provided in first week of June - Tamilnadu Govt

ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாமாயிலும், துவரம் பருப்பும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் என தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இன்று (மே 28) தெரிவித்துள்ளது,

தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

Palm oil to be provided in first week of June - Tamilnadu Govt

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்று (மே 27) 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

24,96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8,11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் 2024 மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யார் பிரதமர் வேட்பாளர்? டெல்லி செல்லும் ஸ்டாலின்

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ’படையப்பா’ – எப்போ தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share