வார விடுமுறை என்றாலே காலையும் மதியமும் என்ன சமைப்பது என்பதற்கு இணையாக, மாலை நேர ஸ்நாக்ஸுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும் பலருக்கும். வழக்கமான ஸ்நாக்ஸ் வகைதான்…
கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தால் சுவையும் ஆரோக்கியமும் பன்மடங்கு கூடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த பசலைக்கீரை கபாப். இந்த வார இறுதி நாளை சிறப்பாக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு, கிராம்பு – தலா 2
பச்சைமிளகாய் – 2
பாலக் கீரை – அரை கப்
வேகவைத்த பச்சைப் பட்டாணி – கால் கப்
துருவிய டோஃபு பனீர் – கால் கப்
சாட் மசாலா – அரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் – கால் டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
பிரெட் தூள் (பிரவுன் பிரெட்) – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – சமைக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பூண்டு, கிராம்பை நசுக்கிக் கொள்ளவும். பசலைக்கீரை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றுடன் முக்கால் கப் நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை சமைக்கவும். அதிகமான நீரை வடிகட்டி விடவும்.
கீரை, பட்டாணி இவற்றுடன் வெந்த பருப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). பனீர், சாட் மசாலா, கரம் மசாலா தூள் சேர்க்கவும். சிறிதளவு மாவு எடுத்து, உள்ளங்கைகளில் தட்டையாகத் தட்டி. பிரெட் தூளில்புரட்டி, நான்-ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் பொன்னிறமாக ஆகும் வரை சமைக்கவும்.
