குழந்தைகளுக்குப் பிடித்த உணவு வகைகளில் பாஸ்தாவுக்கு தனியிடம் உண்டு. குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதற்காக வெறுமனே செய்யாமல், வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சத்தாகவும் செய்ய இந்த பாலக் பாஸ்தா ரெசிப்பி உதவும். அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.
என்ன தேவை?
தண்ணீர் – 2 லிட்டர்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பாஸ்தா – 200 கிராம்
பாலக் கீரை – அரை கட்டு
கொத்தமல்லி – 50 கிராம்
பூண்டு – 4 பற்கள்
ஊறவைத்த பாதாம் – 5 கிராம்
ஊறவைத்த முந்திரி – 5 கிராம்
ஆலிவ் எண்ணெய் – 200 மில்லி
காளான் – 50 கிராம்
குட மிளகாய் – 50 கிராம்
துருவிய சீஸ், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் உப்பு, எண்ணெய் மற்றும் பாஸ்தா சேர்த்துக்கொள்ளவும். ஆறு நிமிடங்கள் கொதிக்கும் நீரில் பாஸ்தாவை வேக விடவும். பின்பு, நீரில் இருந்துஎடுத்து வடிகட்டி வேறு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாலக் கீரை, நறுக்கிய கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, ஊறவைத்த பாதாம், முந்திரி மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஆலிவ் எண்ணெய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய காளான், குடமிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த பாலக் கீரையை சேர்க்கவும். ஒரு நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும். தொடர்ந்து, வேக வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். பின்னர் துருவிய சீஸ் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை அணைத்து விடவும். சுவையான சுலபமான பாலக் பாஸ்தா ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…