பாகிஸ்தான் தூதரை நாட்டுக்குள்ளேயே விடாத அமெரிக்கா… என்ன நடந்தது?

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தானின் துர்க்கெமனிஸ்தான் நாட்டு தூதராக இருப்பவர் கே.கே. அசான் வாகன். இவர், விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அவரிடத்தில் உண்மையான பாஸ்போர்ட் , விசா மற்றும் உரிய பயண ஆவணங்கள் இருந்துள்ளன. எனினும், லாஸ் ஏஞ்சல் நகருக்குள் அனுமதிக்கப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டார்.

அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் விசாவில் சர்ச்சைக்குரிய குறிப்புகளை கண்டதால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது . இது தவிர வேறு காரணங்கள் எதையும் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.Pakistani envoy denied entry

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் செயலாளர் அமினா பலோச் ஆகியோருக்கு இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அதன் துணை தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விஷயங்கள் குறித்து விளக்க வாகன் இஸ்லாமாபாத்துக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல் உள்ளது. ஏனென்றால், ஒரு நாட்டின் தூதரை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்காதது அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறையில் பல முக்கிய பதவிகளை வாகன் வகித்துள்ளார். துர்க்மெனிஸ்தான் நாட்டு தூதராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, வாகன் காத்மாண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இரண்டாவது நிலை செயலாளராக பணியாற்றினார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துணை தூதராகவும் இருந்துள்ளார்.Pakistani envoy denied entry

இந்த சம்பவத்துக்கும் இரு நாட்டு உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமெரிக்காவில் வாகன் பதவிக் காலத்தில் இருந்தபோது, நிர்வாகத்தில் சில புகார்கள் ஏற்பட்டன. அதனடிப்படையில், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கூடாது என்று விரைவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவிக்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share