பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் (Shuttle train) மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அந்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து ‘ஜாபர் எக்ஸ்பிரஸ்’ ரயிலை இணைப்பதற்காக இந்த சிறப்பு ரயில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. ரயில் குவெட்டா ரயில்வே தடம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ரயிலின் ஒரு பெட்டி மீது மோதி வெடித்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் ரயிலின் என்ஜின் மற்றும் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டன. இரண்டு பெட்டிகள் தலைகீழாகக் கவிழ்ந்தன. குடியிருப்புப் பகுதிக்கு அருகே இந்த விபத்து நடந்ததால், அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில் வாகனங்கள் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதும், குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதும், ரயில்வே தண்டவாளம் அருகே இடிபாடுகள் மற்றும் இரும்பு உதிரிபாகங்கள் சிதறிக் கிடப்பதும் தெரியவந்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்
தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்தைச் சூழ்ந்து கொண்டு தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்:
“குவெட்டாவின் சமன் பாடக் (Chaman Phatak) அருகே நடத்தப்பட்ட, அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த மற்றும் பலரைக் காயப்படுத்திய இந்த கொடூரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பயங்கரவாதத்தின் இத்தகைய கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தான் மக்களின் மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் முற்றிலுமாக ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரமான வேளையில் ஒட்டுமொத்த நாடும் பலுசிஸ்தான் மக்களுடன் உறுதுணையாக நிற்கிறது.” என தெரிவித்துள்ளார்.
