முதல் இன்னிங்சில் 556 ரன்கள்… சொந்த மைதானத்தில் நொந்த பாகிஸ்தான்

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எப்போதுமே கணிக்க முடியாது. திடீரென்று மலை போல தெரிந்து பனி போல விலகி விடுவார்கள்.  மடு போல இருந்து மலையளவு வெற்றி பெற்று விடுவார்கள். கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி  போட்டியை விட்டு வெளியேறும் சூழலில் இருந்து கோப்பையை தட்டி சென்றது நினைவிருக்கிறதா?

வெற்றி பெறுவதிலும் தோல்வியடைவதிலும் பாகிஸ்தான் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிட்ச் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி  முதல் இன்னிங்சில்   556 ரன்கள் குவித்தது.

அடுத்து , இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. ஜாக் கிரவ்ளி 78 ரன்களும், பென் டக்கெட் 84 ரன்களும் எடுத்தனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் சேர்த்தனர். ஜோ ரூட் 262 ரன்களும், ஹாரோ ப்ரூக் 317 ரன்களும் குவித்தனர்.

இங்கிலாந்து அணி 150 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி நான்காம் நாளின் பிற்பகுதி மற்றும் ஐந்தாம் நாள் மீதமிருந்த நிலையில் நிதானமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்யும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிக  ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடினர். இதனால்,  அந்த அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. கடைசி நாளில் 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .  இதனால், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.

147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கும் மேல் சேர்த்த பின்னரும்  இன்னிங்ஸ் தோல்வி அடைந்த முதல் அணி என்ற புதிய சாதனையை பாகிஸ்தான் அணி ஏற்படுத்தியுள்ளது. சொந்த நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றியே பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதனையிலும் ஒரு வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமனம்!

126 ஆண்டுகள் பழமையானது… எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் ரயில் நிலையம் அகற்றம்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share