பாகிஸ்தானில் விபத்தை ஏற்படுத்தி இருவர் சாவுக்கு காரணமாக இருந்த பெண் ஜாலியாக சிரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் நடாஷா அலி. இவர் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி கராச்சி நகரில் கர்ஸ் சாலையில் கார் ஓட்டி சென்ற போது விபத்தை ஏற்படுத்தினார்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் இவர் ஓட்டி சென்ற கார் மோதியது. இதில்,ஒரு தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய பிறகு, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்த பெண் சம்பவ இடத்தில் நடந்து கொண்டார். நான் யார் என்று தெரியுமா? எனது தந்தை யார் என்று தெரியுமா? என்றும் நடாஷா விபத்து நடந்த இடத்தில் கத்தினார். அதோடு, சிரிக்கவும் செய்தார்.
32 வயதான இந்த பெண்ணின் கணவர் இக்பால், குல் அகமது குழுமங்கள் என்ற பெயரில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அந்த பெண்ணின் தந்தையும் தொழிலதிபராக உள்ளார். தற்போது, இணையத்தில் அந்த பெண் சிரிக்கும் வீடியோ பரவியதையடுத்து , பலரும் அவரை கடுமையாக கண்டித்தனர். சிலர், உனது தவறுக்கு இறைவன் தக்க தண்டனை தருவான் என்றும் பழித்துள்ளனர்.
விபத்தையடுத்து, நடாஷா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் கூறுகையில், நடாஷா சற்று மன நலம் சரியில்லாதவர். அதற்காக, மருந்துகளும் சாப்பிட்டு வருகிறார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
மனநலம் சரியில்லாதவருக்கு கார் ஓட்ட சாவி கொடுத்தது ஏன் ? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!
