அரசுக்கு சொந்தமான பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. pakistan ex pm imran khan14 years jail
கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தார்.
அந்த காலகட்டத்தில் வெளிநாட்டில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்தநிலையில், அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக இம்ரான் கான், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராவல்பிண்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட இந்த சிறை தண்டனையை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர், பாகிஸ்தான் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அரசுக்கு சொந்தமான பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ராவல்பிண்டி சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுப் பொருட்களை மோசடி செய்ததாக இம்ராகான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் தான் ராவல்பிண்டி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இருவருக்கும் 10 ஆண்டுகள் பொது பதவி வகிக்க தடை மற்றும் ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்திதொடர்பாளர் சையத் சுல்பிகார் புகாரி அல்ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
“பாகிஸ்தானின் நீதித்துறை வரலாற்றில் இன்று மற்றொரு சோகமான நாள். நீதித்துறை சிதைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், குறுக்கு கேள்விகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
இறுதி வாதம் இன்னும் நிறைவடையவில்லை. இந்த தீர்ப்பானது முன்னரே தீர்மானிக்கப்பட்டது போல உள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இம்ரான்கானுக்கு அடுத்தடுத்து தண்டனை விதிக்கப்பட்டு வருவது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பான சூழல்: திரவுபதி முர்மு உறுதி!
திரிஷா விவகாரம் – ரூ. 1 லட்சம் அபராதம்: மன்சூர் அலிகானுக்கு தடை விதிக்க மறுப்பு!
pakistan ex pm imran khan14 years jail