பாகிஸ்தான் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் 17 பயணிகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகப் பெய்து வந்த கனமழையால் நாட்டின் 3-ல் 1 பங்கு முழுவதுமாக நீரில் மூழ்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் பாகிஸ்தானின் தாது மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள், மீட்புக் குழுவினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெள்ள பாதிப்புகள் தற்போது குறைந்து வருவதால் மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு வெள்ள பாதிப்பால் வேறு இடங்களில் தங்கியிருந்த தாது மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் நேற்று (அக்டோபர் 12) இரவு ஒரு தனியார் பேருந்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த தனியார் பேருந்து கராச்சியின் துறைமுக நகரம், ஹைதராபாத் மற்றும் சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரா நகரங்களை இணைக்கும் எம்-9 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் 17 பயணிகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு பயங்கரமான தீக்காயம் ஏற்பட்டது.
அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே மீட்புக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சில பயணிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பேருந்திலிருந்து ஜன்னல் வழியாக குதித்து விட்டனர் என்று பாகிஸ்தான் சுகாதார செயலாளர் சிராஜ் காசிம் சூம்ரோ செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்துப் ஜாம்ஷோர் மாவட்ட காவல் ஆணையர் ஆசிப் ஜமில் கூறுகையில், “இந்த தீ விபத்திற்குச் சரியான காரணம் தெரியவில்லை.
ஆனால் பேருந்தின் பின் பக்கம் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதில் முழு பேருந்தும் தீயில் எரிந்து நாசமாகியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
பாகிஸ்தானில் இதுபோன்ற தீவிபத்து ஏற்படுவது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் பேருந்து ஒன்று எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
