“இந்தியத் தாக்குதலில் எங்களைக் காப்பாற்றியது கடவுள்தான்!” – பாக். ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஓபன் டாக்!

Published On:

| By Santhosh Raj Saravanan

pakistan army chief asim munir divine help claim operation sindoor india conflict

“எங்களிடம் ஆயுதங்கள் இருந்தனவா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் ‘தெய்வீக உதவி’ (Divine Help) இருந்தது. அதை நாங்கள் உணர்ந்தோம்!” – இப்படி ஒரு பரபரப்பான கருத்தை வெளியிட்டிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தானின் ராணுவத் தளபதி (மற்றும் புதிதாக ஃபீல்ட் மார்ஷலாகப் பதவியுயர்வு பெற்றவர்) ஆசிம் முனீர் (Asim Munir).

சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய உலமாக்கள் மாநாட்டில் (National Ulema Conference) அவர் பேசிய வீடியோ வெளியாகி, இந்தியா – பாகிஸ்தான் உறவில் மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறது.

ADVERTISEMENT

“தெய்வீக உதவி” – நடந்தது என்ன? கடந்த மே மாதம் (2025), இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த நான்கு நாள் மோதலை யாரும் மறந்திருக்க முடியாது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர்‘ (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ஆசிம் முனீர், “அந்தக் கடுமையான சண்டையின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தெய்வீக உதவி கிடைத்தது. அதை நாங்கள் களத்தில் உணர்ந்தோம். இது 100% உண்மை” என்று கூறியுள்ளார். நவீனப் போர்க்களத்தில் ஒரு ராணுவத் தளபதி இவ்வாறு ஆன்மீக ரீதியாகப் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தலிபான்களுக்குக் கெடுபிடி: இதே மேடையில் அவர் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். “பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தும் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) அமைப்பில் 70% பேர் ஆப்கானியர்கள் தான். எங்கள் நாட்டு குழந்தைகளின் ரத்தம் சிந்துவதை வேடிக்கை பார்க்க முடியாது. தலிபான்கள் ஒன்று பாகிஸ்தானுடன் இருக்க வேண்டும் அல்லது டிடிபி (TTP) பயங்கரவாதிகளுடன் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்றை முடிவு செய்யுங்கள்” என்று கறாராகக் கூறியுள்ளார்.

“ஜிஹாத்” அறிவிக்க யாருக்கு உரிமை? உள்நாட்டில் மதத்தின் பெயரால் இயங்கும் அமைப்புகளுக்குக் கடிவாளம் போடும் விதமாக, “ஒரு இஸ்லாமிய தேசத்தில், ‘ஜிஹாத்’ (புனிதப்போர்) அறிவிக்கும் உரிமை அரசுக்கு மட்டுமே உள்ளது. தனிநபர்களோ அல்லது குழுக்களோ ஜிஹாத் அறிவிக்க முடியாது” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பின்னணி: ஆசிம் முனீர், தன்னை ஒரு மதப்பற்றுள்ள ராணுவத் தலைவராகக் காட்டிக்கொள்ள முயல்வது இது முதல் முறையல்ல. குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி, “மெக்கா மற்றும் மதினாவைப் பாதுகாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது” என்றும் அவர் பேசியுள்ளார்.

ராணுவ பலத்தைப் பற்றிப் பேசாமல், ‘கடவுளின் உதவி’ பற்றிப் பாகிஸ்தான் தளபதி பேசுவது, அந்நாடு எந்த அளவிற்கு நெருக்கடியில் உள்ளது என்பதைக் காட்டுவதாகவே இந்தியப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். மே மாதம் நடந்த மோதலின் வடு இன்னும் ஆறாத நிலையில், இவரின் இந்தப் பேச்சு எல்லையில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share