இந்தியாவின் ‘நீலப்புரட்சி’யில் மிக முக்கியப் பங்கு வகித்த ‘மீன்வளத்துறை’ விஞ்ஞானி பத்மஶ்ரீ விருது பெற்ற கர்நாடகாவைச் சேர்ந்த சுப்பண்ணா அய்யப்பன், மர்மமான முறையில் இறந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஆர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் சுப்பண்ணா அய்யப்பன். மைசூரில் வசித்து வந்த சுப்பண்ணா அய்யப்பன் கடந்த மே 7-ந் தேதி முதல் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் ஶ்ரீரங்கப்பட்டினம் காவிரி ஆற்றில் இருந்து சுப்பண்ணா அய்யப்பனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுப்பண்ணா அய்யப்பன் பயன்படுத்திய இருசக்கர வாகனம், காவிரி ஆற்றின் கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனால் சுப்பண்ணா அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே ஐசிஆர் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர் வேணுகோபால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில், பத்மஶ்ரீ விருது பெற்ற சுப்பண்ணா அய்யப்பன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.