குழந்தைகளோடு பார்ப்பதற்கான ஒரு ‘பேமிலி’ படம்!
’எத்தனை வயசானாலும் அந்த குழந்தை மனசு மாறவே இல்ல’ என்று சில பிரபலங்களைக் குறிப்பிடுவதுண்டு. அதனை நேர்மறையாகவும் குறிப்பிடலாம், எதிர்மறையாகவும் சொல்லப் பயன்படுத்தலாம். Paddington in Peru movie
எப்படிப் பயன்படுத்தினாலும், கள்ளம் கபடமற்ற இயல்பொன்றை அடைவதென்பது நிச்சயம் அவ்வளவு எளிதானதல்ல. மிகச்சில விஷயங்கள் அப்படியொரு நிலையை அடையத் துணை நிற்கும். அனிமேஷன் படங்கள் பார்ப்பதென்பது அதிலொன்று. குறிப்பாக, ‘பேமிலி’ படங்கள் என்று சொல்லத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டவை அதனைச் சாதிக்கும்.

கிட்டத்தட்ட அப்படியொரு திரைப்படமாகத் தோற்றமளிப்பது ‘பாடிங்டன் இன் பெரு’ (Paddington in Peru). கற்பனையான பாடிங்டன் எனும் கரடி பாத்திரத்தை மையமாகக் கொண்டு ஏற்கனவே ‘பாடிங்டன் 1 & 2’ திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் மூன்றாவதாக இணைந்திருக்கும் இப்படம் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது? Paddington in Peru movie
சாகசக் கதை! Paddington in Peru movie
‘சாகசக் கதைகள்’ என்ற பெயரில் யூடியூபில் தமிழில் சில வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பெரியவர்களே பார்த்தாலும், அதன் உள்ளடக்கத்தைச் சீரணிக்கச் சில நாட்கள் ஆகும். கிட்டத்தட்ட தொலைக்காட்சி தொடர்களுக்குச் சவால் விடும் வகையில் போட்டி, பொறாமை, வஞ்சகம், துரோகம் என்று எதிர்மறையான விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். Paddington in Peru movie
அவற்றில் இருந்து வேறுபட்ட அனுபவத்தைத் தரவல்லது ‘பாடிங்டன் இன் பெரு’. பாடிங்டன் எனும் ஒரு கரடியை லண்டனில் வாழும் ’ப்ரவுன்’ குடும்பம் தத்தெடுக்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவராக அது எப்படி மாறுகிறது என்பதைக் கூறின முதல் இரண்டு திரைப்படங்கள். அதனைப் பார்க்காதவர்களும் கூட, இப்படத்தைக் காணும் வகையில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. Paddington in Peru movie
ப்ரவுன் குடும்பத்தில் ஒருவராக மாறியிருக்கும் பாடிங்டனுக்குப் பெருவில் இருந்து ஒரு கடிதம் வருகிறது. அமேசான் ஆற்றில் மூழ்கவிருந்த பாடிங்டனைக் காப்பாற்றி வளர்த்த லூசி எனும் பெண் கரடி உடல்நலம் நலிவடைந்த நிலையில், வயதான கரடிகளுக்கான பாதுகாப்பகத்தில் இருப்பதாகத் தகவல் வருகிறது. பாடிங்டனை நினைத்து அவர் ஏங்குவதாக, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த பாதுகாப்பகத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாசிரியை. Paddington in Peru movie
தகவல் கிடைத்ததும் பெருவுக்குப் பாடிங்டனை அனுப்ப ஏற்பாடு செய்கின்றனர் ப்ரவுன் குடும்பத்தினர். முதலில் அவர்கள் யாரும் உடன் செல்லும் ஐடியாவில் இல்லை.

‘சாகசம் பண்ணாம ஒரு வாழ்க்கையா’ என்று தினமும் அலுவலகத்தில் தன்னை ஏய்க்கும் மேலதிகாரியை எதிர்கொள்ள நினைக்கிறார் ஹென்றி ப்ரவுன். அந்த நேரத்தில், ‘நாமளும் பாடிங்டனோடு சேர்ந்து பெருவுக்குப் போகலாம்’ என்று மனைவி எமிலி சொல்வது அவருக்கு ஏற்புடையதாகத் தெரிகிறது. மகன் ஜோனதன், மகள் ஜூடியின் விருப்பத்தை மீறி, இருவரையும் அவர்கள் உடன் அழைத்துச் செல்கின்றனர்.
பெருவில் இறங்கி அந்த பாதுகாப்பகத்திற்குச் சென்றால், லூசி அங்கிருந்து சென்றுவிட்டதாகச் சொல்கிறார் கடிதம் எழுதிய கன்னியாசிரியை. அவர் எங்கு சென்றிருப்பார் என்றறியும் முயற்சியில் பாடிங்டன் இறங்க, ப்ரவுன் குடும்பம் அதற்குத் துணை நிற்கிறது.
லூசியின் அறையில் இருக்கும் வரைபடமொன்றில் ‘ரூமி பாறை’ பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அங்குதான் அவர் சென்றிருப்பார் என்ற யோசனையில், அதனை நோக்கிய பயணத்தை அவர்கள் தொடங்குகின்றனர். அமேசான் ஆற்றில் ஒரு படகில் பயணிக்கின்றனர். அப்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதன் முடிவில் லூசி கரடி கிடைத்ததா, இல்லையா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘பாடிங்டன் இன் பெரு’ ஒரு லைவ் ஆக்ஷன் அனிமேஷன் திரைப்படம் ஆகும். அதாவது, பாடிங்டன் எனும் பாத்திரம் மட்டுமே அனிமேஷன் முறையில் படைக்கப்பட்டிருக்கும். இதர பாத்திரங்கள் நாம் சாதாரணமாகப் பார்க்கிற படங்கள் போன்று படமாக்கப்பட்டிருக்கும். ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினி கார்ட்டூன் பாத்திரங்களோடு ஆடுவாரே, கிட்டத்தட்ட அப்படியொரு அனுபவத்தைத் தரவல்லவை இந்த வகைமையில் உருவாக்கப்படுகிற படங்கள்.
இந்த வகைமையில் சாசகக் கதையொன்றைச் சொல்கிறது இப்படம். குறைகள் நம் கண்களுக்குத் தட்டுப்பட விடாமல், கதையோட்டத்தோடு ஒன்றச் செய்யும் வகையில் காட்சியாக்கத்தைக் கொண்டிருப்பது இப்படத்தின் சிறப்பு.
குடும்பத்தோடு குதூகலிக்கலாம்!
’டாம் அண்ட் ஜெர்ரியில் கூட வன்முறை சித்தரிப்பு இருக்கிறதே’ என்பவர்களையும் வாயடைக்கச் செய்யும் வகையில் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘பாடிங்டன் இன் பெரு’. அப்படிப்பட்ட காட்சியமைப்பு இதில் இல்லை. அதற்கேற்ப, இப்படத்தில் பாடிங்டனின் உலகம் படைக்கப்பட்டிருக்கிறது.

மைக்கேல் ஃபாண்டின் ‘பாடிங்டன் கரடி’ எனும் பாத்திர வார்ப்பைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதையை மார்க் பர்டன், ஜோன் போஸ்டர், ஜேம்ஸ் லமாண்ட் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.
மலையுச்சியிலுள்ள மரமொன்றில் இருக்கும் ஆரஞ்ச் பழத்தைப் பறிக்க பாடிங்டன் முற்படுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அடர்ந்த புதர் செடிகளுக்கு நடுவே ஏற்படும் சலசலப்பு, அதனூடே தலை நீட்டும் பாடிங்டன், அதன் கண்ணில் படும் ஆரஞ்ச் பழம், அதனைப் பறிக்க அம்மரத்தின் மீது ஏறுகிற இடம், பாதி ஏறியபிறகே, அம்மரம் ஒரு சரிவில் இருப்பதும் அதனடியே அமேசான் ஓடுவதும் நமக்குத் தெரிய வருவது என்று அக்காட்சி வடிவமைக்கப்பட்ட விதமே இப்படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என்பதைச் சொல்லிவிடும்.
இத்திரைக்கதையில் அனிமேஷன், பேமிலி, ஆக்ஷன் அட்வெஞ்சர் வகைமை கதைகளுக்கே உரிய ‘க்ளிஷே’ வசனங்கள், காட்சிகள், ஷாட்கள் உண்டு. அவற்றை நாம் முன்கூட்டியே உணர்ந்தாலும் கூட, இதனைப் பார்ப்பதில் எந்தச் சங்கடமும் இல்லை. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
எர்க் வில்சன் ஒளிப்பதிவு செய்கிற இப்படத்திற்கு டாரியோ மரியநெலி இசையமைத்திருக்கிறார். ஊனா நி கோனிலா இதனைத் தொகுத்திருக்கிறார்.
பாடிங்டன் பாத்திரத்திற்கு பென் விக்ஷாவும், லூசி பாத்திரத்திற்கு இமெல்டா ஸ்டாண்டனும் குரல் தந்திருக்கின்றனர்.
ஹியூ போனவில், எமிலி மார்ட்டிமர், ஜுலி வால்டர்ஸ், ஜிம் ப்ராட்பெண்ட், மேடிலின் ஹாரிஸ், சாமுவேல் ஜோஸ்லின், ஒலிவியா கோல்மன், கார்லா டவுஸ் உடன் இதில் ‘தி மாஸ்க் ஆஃப் ஜாரோ’ புகழ் ஆண்டனியோ பாந்தரெஸும் நடித்திருக்கிறார்.

மூன்று முதல் பத்து வயதான குழந்தைகளை அழைத்துச் சென்று, குதூகலமாக இப்படத்தைக் கண்டுகளிக்க முடியும். அதற்கேற்ற ‘இனிமையான’ தருணங்களை வழங்குகிறது ‘பாடிங்டன் இன் பெரு’.
இப்படம் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிவிட்டது. இந்தியாவில் கோடை விடுமுறையைக் குறிவைத்து இப்போது வெளியாகியிருக்கிறது. அந்த திட்டமிடல் சரியானதா என்பதை இப்படத்தின் வெற்றி நமக்குச் சொல்லும்..!
பாடிங்டன் எனும் கார்ட்டூன் பாத்திரம் நமக்குத் தெரியாவிட்டாலும், அதனை மையப்படுத்திய முந்தைய இரு படங்களைக் காணாவிட்டாலும், இப்படம் தருகிற அனுபவம் ‘செம’ ரகத்தில் இருக்கும். அதேநேரத்தில், அனிமேஷன் படங்களைப் பார்க்கிற இயல்புள்ளவர்களால் மட்டுமே இந்த ‘லைவ் ஆக்ஷன் அனிமேஷன்’ படத்தை ரசிக்க முடியும். அதற்குத் தயார் என்றால், முந்தைய இரு பாடிங்டன் சீரிஸ் படங்களையும் பார்த்தாக வேண்டுமென்ற எண்ணத்தை விதைக்கவல்லது இப்படம். Paddington in Peru movie