கள்ளக்குறிச்சியில் சட்டத்துக்கு புறம்பாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விஷசாராயத்தை அருந்தியதால் ஆண், பெண் பேதமின்றி 150க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள்.
தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழ்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், மது குடிப்பதால் ஏற்படும் சீர்குலைவுகளை பதிவு செய்திருக்கும் படம் ஒன்றை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படத்தின் தலைப்பும், அதனையொட்டிய போஸ்டர் டிசைனும் பல்வேறு கேள்விகளை, விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பு, இயக்கம் என இரண்டிலும் மற்றவர்களிடம் இருந்து தனிப் பாதையில் பயணித்து வருபவர் பா.ரஞ்சித்.
இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்கள் தலித் உரிமை பற்றியதாக, சமத்துவம் பேசுவதாகவே இருக்கும்.
அதே போன்று இவரது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய படங்களை பிறரது பங்களிப்புடன் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களுக்கு இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படங்களின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த அரையாண்டில்‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் வெளியானது. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில்குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது.
படத்தின் தலைப்பும், போஸ்டரும் பொது வெளியில் கவனம் பெற்று வருகிறது. மது பாட்டிலுக்குள் குரு சோமசுந்தரம் மதுவை கையில் ஏந்திக்கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார்.
அதற்கு கீழே பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் சிலேட்டு, கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உபகரணம், உள்ளிட்டவை சிதறிக்கிடக்கிறது. இதன் மூலம் படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் படமாக இருக்கும் என தெரிகிறது.
தமிழ் சினிமாவில் மசாலா திரைக்கதைகளில் ஹீரோயிசத்தை முன்னிறுத்தும் படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருந்த சூழ்நிலையில், சமூக நீதியை, சமத்துவத்தை பேசும் கதையை கதாநாயகனாக்கி கபாலி, காலா படங்களில் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைத்தவர் பா.ரஞ்சித்.
தற்போது தமிழகத்தில் நீண்ட காலமாக விவாத பெருளாக, தேர்தல் பிரச்சாரங்களில் பிரதானமாக இடம் பெற்று வரும் மதுவும், அதனால் ஏற்படும் சமூக, தனி நபர் பாதிப்பு, இழப்புக்களையும் திரைப்படமாக்கியுள்ளார் பா.ரஞ்சித்.
அதனை ’பாட்டல் ராதா’ படம் பேசும் என்பதை தலைப்பு, போஸ்டர் டிசைன் இரண்டும் அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று ”தமிழ் வாழ்க” மக்களவையில் முழங்கிய திமுக எம்.பி.க்கள் : இன்று என்ன நடக்கும்?
சிக்ஸ் மழை… டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா
பாஜக பின்னணியில் வந்த கலெக்டர்… கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
”சொந்த பிள்ளைகளால் பாரத மாதா முதுகில் குத்தப்பட்ட நாள்” : ஆளுநர் ரவி