பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹா எழுதிய கிரிக்கெட்டில் உள்ள அரசியலை மையமாக கொண்ட புத்தகத்தின் அடிப்படையில் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளார் பா. ரஞ்சித். pa ranjith enter bollywood with Palwankar Baloo
அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக கவனம் பெற்றார் பா. ரஞ்சித். அதன்பின்னர் அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட ஒவ்வொரு படங்களும் திரைத்துறை மட்டுமின்றி அரசியல் களத்திலும் பல விவாதங்களை ஏற்படுத்தின.
கடைசியாக அவர் இயக்கி, விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து அவர் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய ஜார்க்கண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுதந்திர வீரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் படம் இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா எழுதிய “A Corner of a Foreign Field” புத்தகத்தின் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக உள்ளது.
சமீபத்தில் சென்னையில் பா.ரஞ்சித் நடத்திய ‘வானம்’ கலைத்திருவிழாவில் பங்கேற்ற ராமச்சந்திர குஹா, ’பாபாசாகேப் அம்பேத்கரைக் கொண்டாட வேண்டிய தேவை!’ என்ற தலைப்பில் விரிவான உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இப்புத்தகம், இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் தோன்றிய கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றைப் பற்றி பேசுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் பால்வங்கர் பாலு கிரிக்கெட் வாழ்க்கை, அவரது சாதனைகளை மையப்படுத்தியே இப்புத்தகத்தை எழுதத் தொடங்கினார் குஹா. ஆனால் அப்போது கிரிக்கெட் விளையாட்டிற்குள் நிலவும் சாதிய பாகுபாடும் தெரியவர, அதுகுறித்து விரிவாக எழுதியது தான் A Corner of a Foreign Field.
கிரிக்கெட் பற்றிய சிறந்த புத்தகங்களில் ஒன்றான இப்புத்தகம், 2002 ஆம் ஆண்டின் சிறந்த புத்தகம் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் புத்தகங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.