2ஜி வழக்கில் தீர்ப்பு எப்போது?

Published On:

| By Balaji

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையே சட்டவிரோதமாக ரூ. 200 கோடி நிதி பரிவர்த்தனை நடந்ததாக தனி வழக்கு நடந்துவருகிறது. இவற்றில், முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா, எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனர் சாகித் பால்வா, வினோத் கோயங்கா, குசேகன் ரியாலிட்டி நிர்வாகிகள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஆ.ராஜா, எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் தவிர்த்த மற்றவர்கள், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நேற்று நீதிபதிகள் ஜெகதீஷ் சிங் கெர், சி. நாகப்பன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சந்திக்குமாறு மனுதாரர்களை அறிவுறுத்தி உள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில், 2ஜி வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார். இவர்தான் லூப் டெலிகாம் நிறுவனத்தின் மீதான வழக்கையும் விசாரித்து வருகிறார். இதனால், 2ஜி வழக்கில் விசாரணை மற்றும் தீர்ப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சைனி லூப் வழக்கை விசாரித்து முடித்த பிறகு 2ஜி வழக்கின் விசாரணை நடத்துவார். செப்டம்பர் வரை அந்த விசாரணை செல்லும். அக்டோபர், நவம்பர் தீர்ப்பு எழுத நேரம் எடுத்துக்கொண்டால், டிசம்பரில் தீர்ப்பு வரலாம்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share