காங்கிரஸ் தவெகவுடன் இணைய வேண்டுமென இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவருடைய ஆசையை சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ராகுல் காந்தியையும், சோனியா காந்தியையும் சந்தித்து கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், திமுகதான் டெல்லிக்கு அடிமை என்றும் விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக காரைக்குடியில் இன்று (ஜனவரி 29) செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “நேரடியாக இரு கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசுவது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?” என்று பதிலளித்தார்.
ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வருகிறார்களே, என்ற கேள்விக்கு, “ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியில் ஒரு பொருளாக பேசப்பட்டது என்பதை பத்திரிகைகளில் பார்த்தேன். இரு கட்சிகளின் தலைமைகளும் இது குறித்துப் பேசி முடிவெடுப்பார்கள், யாரும் அலட்டிக்கொள்ள வேண்டாம்” என்றார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் சேர வேண்டும் என எஸ்.ஏ. சந்திரசேகர் விருப்பம் தெரிவித்தது குறித்துக் கேட்டபோது, அவர் அவருடைய ஆசையை சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது” என்று குறிப்பிட்டார் ப.சிதம்பரம்.
