வெல்வாரா விஜயகாந்த்? கலக்கத்தில் தேமுதிக

Published On:

| By Balaji

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தொடங்கி அவர் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றிபெற்று, அந்தக் கட்சியில் அவர் மட்டுமே எம்எல்ஏ ஆனார். அடுத்து வந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டார். ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். இந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிட்ட இந்த மூன்று தொகுதிகளும் தென்னாற்காடு பகுதிகளான விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை. தமிழ்நாட்டில் எத்தனையோ தொகுதிகள் இருக்க, ஏன் இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிடுகிறார் என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு, இந்த மூன்று தொகுதிகளிலும் உள்ள, பெயரில் ‘ரி’ என்று முடிகிற சிவன் கோயில்தான் சென்டிமெண்ட் என்றார்கள் தேமுதிக-வினர். இதைக் கேட்பவர்களிடம் இயல்பாகவே இன்னொரு கேள்வி எழும். வேறு எந்த தொகுதியிலும் ‘ரி’ என்று முடிகிற சிவன் கோயில் இல்லையா? என்று. இந்த கேள்விகளுக்கு தேமுதிக-வினர் பல காரணங்களைச் சொன்னாலும், உண்மை நிலவரமோ வேறு.

தேமுதிக தொடங்கியபோது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வடமாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர்களும் தலித்களும்தான். இன்றும் தேமுதிக வலுவாக இருப்பது வட மாவட்டங்களில்தான். விஜயகாந்த்தின் அரசியல் வருகையால் பாமக-வுக்கு பெரிய சரிவு ஏற்பட்டது. ஆனால், காலம் அப்படியே போய்விடவில்லை. விரைவிலேயே பாமக தலைவர் ராமதாஸ் தனது எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தி இந்த 3 ஆண்டுகளில் வன்னியர்களைத் தன்பக்கம் இழுத்துவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில்தான், நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், வழக்கம் போல, கட்சி வலுவாக உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட உடனே, பாமக ஏற்கனவே அறிவித்த வேட்பாளரை மாற்றிவிட்டு அக்கட்சியின் வழக்கறிஞர் பாலுவை உளுந்தூர்பேட்டை தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது. அதோடு, உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பார் என்று ராமதாஸ் கூறினார்.

இதனால், தற்போது உளுந்தூர்பேட்டையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள விஜயகாந்த், வெற்றி பெறுவாரா என்று தேமுதிக-வினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். இந்த கலக்கத்துக்குப் பாமக-வின் சவால் மட்டுமே காரணம் அல்ல.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்கு வன்னியர்களுடையது. அதற்கு அடுத்து தலித் வாக்குகள், மூன்றாவது உடையார்கள் வாக்குகள். பாமக-வின் பல வழக்குகளில் ஆஜராகி வன்னியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள வழக்கறிஞர் பாலு இந்தத் தொகுதியின் பலமான வேட்பாளராக உள்ளார். வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திமுக வேட்பாளர் வசந்தவேல் வன்னியர் வாக்குகளையும் கணிசமாக தலித் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்குகளையும் குறிவைத்து அவரும் பலமாக உள்ளார். அந்த தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ குமரகுரு உடையார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர், தலித் வாக்குகளையும் உடையார் வாக்குகளையும் குறி வைத்துள்ளார்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொகுதியில் சமூகப் பின்னணி எதுவும் இல்லாமல் களம் இறங்கி இருப்பதால், அவர் வெற்றி பெறுவாரா? மாட்டாரா? என்று தேமுதிக-வினர் கலக்கத்தில் உள்ளனர். இதைத் தெரிந்துகொண்ட அதிமுக, திமுக, பாமக-வினர், விஜயகாந்த் சினிமாவில் மட்டும் போராடினால் போதாது. அவர் நிஜத்திலும் முடிந்தால் போராடி ஜெயிக்கட்டுமே என்று சவால் விடுகிறார்கள்.

இது குறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் பேசியபோது, அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகள், வேட்பாளர்கள், வேண்டுமானால், சாதியாக செயல்படலாம். ஆனால், மக்கள் அப்படி சாதியாக மட்டுமே செயல்படுவதில்லை. இந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள் சாதிகளைக் கடந்து கேப்டனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் பாருங்கள் என்று தேமுதிக-வினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share