நடிகை சன்னி லியோன் தமிழைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகிலும் கால்பதிக்க உள்ளார்.
ஆபாசப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடியதன் மூலம் தமிழிலும் கால்பதித்த அவர், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். அது தவிர கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்று முதல் மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குநர் ஒமர் லுலு இயக்குகிறார்.
ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் வெளியாகி, அதில் புருவத்தை வளைத்து பிரியா செய்யும் சேஷ்டை மற்றும் கண்ணடிப்பு காட்சிகள் வைரலாக மாறி தேசிய அளவில் புகழை பெற்றுக்கொடுத்தன. ஆனாலும் அந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் படத் தயாரிப்பாளருக்கும், படக்குழுவிற்கும் உள்ள சில பிரச்சினைகள் என்று கூறப்படுகிறது. இதனால் கேரளத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலையிட்டுத் தீர்த்து வைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அது சுமுகமாக முடியும்போது படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு அடுத்து இயக்குநர் ஒமர் லுலு இயக்கும் படத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். இவருடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர். படத்தின் கதைக் களம், மற்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
