பாலஸ்தீனத்தை இந்தியா புறந்தள்ள முடியுமா?

Published On:

| By Balaji

உலக அரசியல் பழகு! – 10 -ஆரா

ஜூன் 6 ஆம் தேதி ஐ.நாவின் சமூக பொருளாதார வளர்ச்சி கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா. ஷாஹித் என்ற பாலஸ்தீனிய தொண்டு நிறுவனம் ஐ.நாவின் பார்வையாளர் அந்தஸ்து கோரிய விண்ணப்பத்தை இஸ்ரேல் எதிர்த்தது. ஷாஹித் தொண்டு நிறுவனம் பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையது என்பதுதான் இஸ்ரேலின் ஒற்றை வாதம். இதை ஏற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா. வரலாற்றிலேயே முதன் முறையாக வாக்களித்தது இந்தியா.

அவ்வளவுதானா… இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகள் விஷயத்தில் இந்தியா இதுவரை கைக் கொண்டிருந்த நிலைப்பாடு நழுவிவிட்டதா? இந்தியா இஸ்ரேலின் முழுமையான தோழனாகிவிட்டதா? பாலஸ்தீனத்தை இந்தியா கைவிட்டுவிட்டதா? இப்படிப் பல கேள்விகள் இந்த ஒற்றை வாக்கின் மூலம் கிளம்பின.

ADVERTISEMENT

சரியாக இரு வாரங்கள் கழித்து ஜூன் 20 ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ்குமார் இது தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

“ஐ.நாவின் சமூக பொருளாதார வளர்ச்சி கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அந்த தொண்டு நிறுவனத்தின் பயங்கரவாத தொடர்புகள் குறித்த மறு ஆய்வு தேவை என்ற இஸ்ரேலின் கோரிக்கைக்கு ஏற்பவே இந்தியா வாக்களித்தது. இதை பாலஸ்தீன விவகாரத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடாது” என்பதுதான் ரவீஷ்குமாரின் விளக்கம்.

ADVERTISEMENT

இந்த விளக்கத்தை மத்திய அரசு ஏன் வெளியிட்டது? வெளியிடாமல் கூட இருந்திருக்கலாம். அப்படியென்றால் இந்தியா முழுமையான இஸ்ரேலின் தோழனா? பாலஸ்தீனத்தின் ஆபத் பாந்தவனா?

கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி பாலஸ்தீனத்துக்கு சென்றார். இதுவும் ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பயணம்தான். அந்த பயணம் பற்றிய தகவல்களை அறிந்தால் இந்தியா இன்னும் பாலஸ்தீனத்தைக் கைவிடவில்லை என்பதும் நமக்கு விளங்கலாம்.

ADVERTISEMENT

ஜோர்டானிய ராணுவ விமானத்தில் அம்மான் நகருக்கு சென்ற மோடி அங்கிருந்து மிகவும் சர்ச்சைக்குரிய அதாவது இஸ்ரேல் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடக் கூடிய மேற்குக் கரை நகரான ரமல்லாவுகு சென்றார், இதை வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகை என்று பாலஸ்தீனம் கொண்டாடி மகிழ்ந்தது. பாலஸ்தீய அதிபர் முகமது அப்பாஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய மோடி பாலஸ்தீனத்தில் இந்தியாவின் சார்பிலான நலத் திட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார். இரு தரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

அதுமட்டுமல்ல இந்தியாவின் நெடுநாள் தோழனும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராஃபத்தின் நினைவு மியூசியத்துக்கு சென்றார் மோடி. அங்கே அராஃபத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது “அராஃபத் உலகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். பாலஸ்தீனத்துக்கு அவரது பங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்தியாவுக்கு மிக நெருங்கிய நல்ல தோழனாக இருந்தவர். அவரை ரமல்லாவில் வந்து மரியாதை செய்கிறேன்” என்று குறிப்பிட்டார் மோடி. அராஃபத்தை நினைவுகூரும்போது மோடி, ‘அபு அம்மார்’ என்ற பெயரையே பயன்படுத்தினார். ஏனெனில் பாலஸ்தீனத்தில் அராஃபத்தை அபு அம்மார் என்ற பெயரிலேயே மக்கள் அழைத்தார்கள், அழைக்கிறார்கள் என்ற நுட்பம் அறிந்து அந்த பெயரையே பயன்படுத்தினார்.

கடந்த 2018 பிப்ரவரி 10 ஆம் நாள் பாலஸ்தீனத்துக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம் மேற்கொண்ட மோடி, ‘பாலஸ்தீனம் சுதந்திரமான அமைதியான பகுதியான மிளிரவேண்டும்’ என்று வாழ்த்தினார். இந்த வருடம் ஜூன் மாதம் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தைக் கூட ஐ.நாவின் சமூக பொருளாதார வளர்ச்சி கவுன்சிலில் இடம்பெற அதே மோடி தலைமையிலான அரசு தடுக்கிறது. அப்படியென்றால் மோடி தலைமையிலான இந்தியா…. இஸ்ரேலுக்கு நண்பரா? பாலஸ்தீனத்துக்கு நண்பரா?

இந்தக் கேள்விக்கு பதில் தேட இன்னும் ஆழமான உலக அரசியல் பழக வேண்டியிருக்கிறது.

இஸ்ரேல் இன்று இந்தியாவுக்கு ஆயுத சப்ளை செய்யும் மூன்று நாடுகளில் முக்கியமான நாடு. ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகம் இஸ்ரேலோடு நடந்துகொண்டிருக்கிறது. நவீன விவசாயத்தில் புகழ்பெற்ற தொழில் நுட்பங்களைப் பெற்றுள்ள இஸ்ரேல் அதை இந்தியாவுக்கும் பகிர்ந்துவருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனத்தை விட ஒரு படி மேலேதான் இஸ்ரேலை வைத்திருக்கிறது இப்போதைய இந்தியா. அதுமட்டுமல்ல… நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தன் யாஹு இருவருமே வலது சாரி தேசிய வாதக் காரர்கள். இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இருவரும் இணைகிறார்கள். இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற உலகளாவிய சொற்றொடரை வைத்து பாலஸ்தீனத்துக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவ நினைக்கிறது இஸ்ரேல்.

அதற்காக பாலஸ்தீனம் சார்ந்து இந்தியாவின் நீண்ட நாள் தோழமையை விட்டுவிட முடியுமா? அப்படி விட்டுவிடவும் முடியவில்லை, அதற்கும் காரணம் இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசவியல் பேராசிரியரான விஜய் பிரஷாத் அந்தக் காரணத்தை விளக்குகிறார்.

“இந்தியா இஸ்ரேலோடு எவ்வளவு வேண்டுமானாலும் உறவு பாராட்டலாம். கட்டித் தழுவலாம். ஆனால் அது பாலஸ்தீனத்துக்கு எதிராக அமைந்துவிடக் கூடாது என்பதில் அரபு நாடுகள் உறுதியாக இருக்கின்றன. இந்தியாவுக்கு எண்ணெய் வளத்தையும், இந்தியர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் அரபு நாடுகள் இந்தியாவின் மீது கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே 2017 இஸ்ரேல் பயணத்தைத் தொடர்ந்து 2018 இல் பாலஸ்தீன பயணம் மேற்கொண்டிருக்கிறார் மோடி. அதாவது பாலஸ்தீனத்தை இந்தியா புறக்கணிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதையே இவை காட்டுகின்றன” என்று அல் ஜசீரா ஊடகத்திடம் மோடியின் பாலஸ்தீன பயணத்தின் போது கூறியிருக்கிறார் விஜய் பிரஷாத்.

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு என்ற நியூட்டனின் விதி உலக அரசியலுக்கும் சாலப் பொருந்தும் தானே…

(அடுத்த சனியன்று சந்திப்போம்)

[பகுதி 1](https://minnambalam.com/k/2019/05/04/9)

[பகுதி 2](https://minnambalam.com/k/2019/05/11/17)

[பகுதி 3](https://minnambalam.com/k/2019/05/18/19)

[பகுதி 4](https://minnambalam.com/k/2019/05/25/24)

[பகுதி 5](https://minnambalam.com/k/2019/06/01/14)

[பகுதி 6](https://minnambalam.com/k/2019/06/08/18)

[பகுதி 7](https://minnambalam.com/k/2019/06/15/10)

[பகுதி 8](https://minnambalam.com/k/2019/06/23/21)

[பகுதி 9](https://minnambalam.com/k/2019/06/29/25)

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share