தீபா சர்ச்சை: மாதவன் விளக்கம்!

Published On:

| By Balaji

‘வேட்புமனு தாக்கல் செய்யும் பதற்றத்தின் காரணமாகவே தீபா மனுவில் தனது பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்’ என்று தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த மாதம் ‘தீபா பேரவை’யை ஆரம்பித்தார். பேரவையை ஆரம்பித்தது முதல் தீபாவுக்கும் அவரது கணவருக்கும் பேரவையை நிர்வகிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் பேரவையிலிருந்து விலகிய மாதவன் கடந்த வாரம் திடீரென்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். மேலும் தீபாவை முதல்வராக்கவே கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார் தீபா. வேட்புமனுவில் தீபாவின் கணவரான மாதவன் பெயர் இடம்பெறவில்லை. அந்த இடம் காலியாகவே விடப்பட்டிருந்தது. இதனால் இருவருக்கும் இடையே இருந்த மோதல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் மாதவன் பேசியபோது கூறுகையில், “எங்களிடையே குடும்ப பிரச்னை எதுவும் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யும்போது பதற்றத்தில் எனது பெயரை எழுத தீபா மறந்துவிட்டார். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. நான் யாருடைய தூண்டுதல் பேரிலும் தனிக்கட்சி தொடங்கவில்லை. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விருப்பத்தின் பேரிலேயே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share