‘சாரணர் இயக்கம் என்பது அரசியல் இயக்கமல்ல; இது மாணவர்களுக்கான தொண்டு இயக்கம்’ என்று தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற கல்வியாளர் மணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தேர்தல் நேற்று செப்டம்பர் 16ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் இருக்கும் இயக்கத்தின் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் முழுமையான ஆட்சி நடைபெற்று வருகிற நிலையிலும், இதுவரை சாரணர் இயக்கத் தலைவராக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் போட்டியிட விரும்பியதில்லை. கல்வியாளர்களின், கல்வி உலகப் பிரதிநிதிகளின் பதவியாகவே இது இருந்துவந்துள்ளது.
இந்த நிலையில் சாரணர் தேர்தலில் அரசியல் முதன்முதலாக நுழைந்தது. பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா, தமிழக சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
நேற்று தேர்தல் தொடங்கிய நிலையிலும், தேர்தல் முடிந்த நிலையிலும் ராஜா தரப்பினர் வந்து தடுத்து நிறுத்தியும் தடைபடாமல் தேர்தலும், வாக்குப்பதிவும் நடைபெற்றன. இறுதியில் பதிவான 286 வாக்குகளில் 232 வாக்குகள் பெற்று மணி தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவரானார். ஹெச்.ராஜா 52 வாக்குகள் பெற்று படு தோல்வி அடைந்தார். 2 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள்.
இந்த நிலையில் சாரணர் இயக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நாம், வெற்றிபெற்ற சாரணர் இயக்கத் தலைவர் மணியைத் தொடர்புகொண்டு சில கேள்விகள் என்றோம். “அரசியல் தவிர வேற எதுவானாலும் கேளுங்க” என்றார்.
ஆனால், **தமிழ்நாடு சாரணர் இயக்கத்தில் அரசியல் புக முயற்சி நடந்ததே?** என்று நாம் கேட்க…
“நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். கல்வியாளர். சாரணர் இயக்கம் என்பது அரசியல் இயக்கமல்ல. இது கல்வி சம்பந்தமான இயக்கம். ரெட் கிராஸ் மாதிரி, என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாதிரி. காந்தியடிகள் சொன்னார், ‘ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தையும் சாரணன் போல, சாரணி போல இருக்க வேண்டும்’ என்று. மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தரக்கூடிய அமைப்புதான் சாரணர் இயக்கம். மீண்டும் சொல்கிறேன். இது அரசியல் அல்லாத இயக்கம். எனவே, இங்கு அரசியலுக்கு இடமில்லை.”
**தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கவில்லையே?**
“சில தேர்வுகள் நடந்ததால் சிலர் வந்து வாக்களிக்க முடியவில்லை. மற்றபடி வாக்குப்பதிவு நன்றாகவே நடந்தது.”
**புதிய தலைவராகப் பொறுப்பேற்ற தங்களின் இலக்கு என்ன?**
“சாரணர் இயக்கம் என்பது மாணவர்களின் அமைப்பு. எனவே, எல்லா பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் தொடங்குவதே எங்கள் இலக்கு. இதற்காக பள்ளிக் கல்வித்துறையின் முழு ஒத்துழைப்போடு முழு முயற்சியில் இறங்குவேன்.”
**ஹெச்.ராஜா இந்தத் தேர்தல் செல்லாது என்கிறாரே?**
“ஒரு பிரச்னையும் இல்லை. எல்லாம் சுபமாக முடிந்தது. ராஜா சார் போட்டியிட்டதால் இதுவரை தெரியாத, அனைவருக்கும் சாரணர் இயக்கம் பற்றி தகவல் சென்று சேர்ந்தது. அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார்.
