நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சர்.சி.வி.ராமன் வீட்டில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தியாவில் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் விஞ்ஞானி சர் சி.வி.ராமன். இவருக்குச் சொந்தமான வீடு பெங்களூரு மல்லேஸ்வரம் 15–வது தெருவில் உள்ளது. இவரின் மறைவிற்குப் பின், இந்த வீட்டைக் கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. இவருடைய வீட்டின் அருகே ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவருடைய வீட்டில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இதேபோல், நேற்று இரவு (நவம்பர் 11) சீனிவாஸ் மற்றும் கங்காதர் ஆகியோர் காவல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அவருடைய வீட்டு வளாகத்திற்குள் முகமூடிகள் அணிந்து வந்த 6 மர்ம நபர்கள் காவலாளிகள் இருவரையும் மிரட்டி, அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி அதனைத் துண்டாக்கி அவர்கள் கொண்டுவந்த காரில் ஏற்றிச் சென்றனர்.
இதுபற்றி காவலாளிகள் இருவரும் மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், மல்லேஸ்வரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், சந்தன மரத்தை வெட்டியவர்கள் தமிழில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தலைமறைவாக உள்ள 6 மர்மநபர்களையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
