ஊரக வேலைத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை!

Published On:

| By Balaji

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 99 சதவிகிதம் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சரான ராம் கிரிபால் யாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான தொழில்நுட்ப வளக் குழுக்களுக்கு ’சாக்சம்’ திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கான ஊதியத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், இடைத்தரகர்களால் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் மின்னணு முறையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடிப் பலன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 99 சதவிகிதம் அளவு ஊழியர்கள் இதனால் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.

ADVERTISEMENT

2015 முதல் 2018 ஜூலை வரையிலான கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அரசுக்கு எவ்வளவு செலவானது என்ற விவரத்தையும் ராம் கிரிபால் யாதவ் மக்களவையில் வெளியிட்டிருந்தார். அதன்படி, 2015-16 நிதியாண்டில் மொத்தம் ரூ.30,902.29 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.40,746.95 கோடியும், 2017-18 நிதியாண்டில் ரூ.43,187.89 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதோடு, நடப்பு 2018-19 நிதியாண்டின் ஜூலை 30 வரையில் ரூ.16,185.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் இத்திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேசிய மின்னணு நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் தொழிலாளர்களுக்கு மின்னணு முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share