ஓயோ ஹோட்டல் & ஹோம்ஸ் உலகம் முழுக்க இயங்கி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ் அகர்வாலால் நிறுவப்பட்டது. இந்த அறைகள் பட்ஜெட்டுக்கு உகந்தவையாக பார்க்கப்பட்டது. தற்போது, உலகம் முழுக்க 80 நாடுகளில் 800 நகரங்களில் 43,000க்கும் மேற்பட்ட ஒயோ அறைகள் உள்ளன.
பெரும்பாலான காதலர்கள் இந்த ஓயோ அறைகளில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால், காதலர்களின் முக்கிய சாய்ஸ்சாக ஓயோ அறைகள் இருந்தன. மனைவி அல்லது கணவர் அல்லாத பார்ட்னர்களுடன் தங்குபவர்களும் ஓயோ அறைகளையே தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த நிலையில், ஓயோ நிறுவனம் புதிய செக்இன் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனிமேல் மனைவி அல்லது கணவர் அல்லாத பார்ட்னர்களுடன் யாரும் தங்க முடியாது. காதலி அல்லது தோழிகளுடனும் சென்று தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் புக்கிங் செய்தாலும் சரி நேரில் சென்று புக்கிங் செய்தாலும் சரி இருவருக்குமுள்ள உறவுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். முதல் கட்டமாக ஓயோ நிறுவனம் இந்த தடையை மீரட் நகரில் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. படிப்படியாக மற்ற நகரங்களிலும் அமல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக ஓயோ வட இந்திய பிரிவு தலைவர் பவாஸ் ஷர்மா கூறுகையில், ‘ஓயோ பாதுகாப்பான மற்றும் பொறுப்பான விருந்தோம்பல் முறையை பின்பற்ற உறுதிபூண்டுள்ளது. தனிமனித சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே வேளையில், சட்டத்தையும், சமுதாயத்தின் கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் எங்கள் புதிய கொள்கை. எங்கள் பொறுப்பை உணர்ந்து புதிய செக்இன் பாலிசியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் தாக்கத்தை கண்டறிந்து படிப்படியாக இந்த தடை பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்’ என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம். குமரேசன்