இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஓவியா நடிக்கும் ‘சேவியர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், விடிவி கணேஷ், ஜி.பி.முத்து, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நேற்று(அக்.5) வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ‘வர்ணா’ என்கிற கதாபாத்திரத்தில் ஓவியா, கடப்பார கணேஷ் என்கிற கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ், ‘டாக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா’ என்கிற கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘முத்து மாமா’ என்கிற கதாபாத்திரத்தில் ஜி.பி.முத்து ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சாண்டோ ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாணிக் ஒளிப்பதிவு செய்கிறார். கோகுல் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொள்ள, இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் , ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஓவியா 2019ஆம் ஆண்டில் வெளியான ‘களவானி – 2’ திரைப்படத்திற்குப் பிறகு இந்தாண்டில் வெளியான ‘பூமர் அங்கிள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி தந்திருந்தார். இடையில் மலையாளத்தில் 2021ஆம் ஆண்டில் வெளியான ‘பிளாக் காஃபி’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் 2021ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ‘ஃபிரண்ட்ஷிப்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். மேலும், 2021ஆம் ஆண்டில் சந்தானம் நடித்து வெளியான ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘சேவியர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டுக்குள் ஸ்ட்ரைக் செய்த பெண்கள் அணி!