பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 18 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Over 200 Flights Cancelled 18 Airports Closed
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானும் பதிலடி தருவதாக அறிவித்துள்ளது. இதனால் இருநாடுகளிடையே போர் அபாயம் சூழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள ஸ்ரீநகர், லே, ஜம்மு, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகர், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா மற்றும் ஜாம்நகர் என 18 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த விமான நிலையங்களின் வழியாக இயக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,
மே 10ஆம் தேதி வரை ஶ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; 165-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றனர்.
ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜம்மு, ஶ்ரீநகர், லே ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் விமான நிலையங்களில் இருந்து அனைத்து விமான சேவைகளும் மே 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என்றனர்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தர்மசாலா, லே, ஜம்மு, ஶ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து 35 விமான சேவைகள் இன்று அதிகாலை 12 மணி முதலே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Over 200 Flights Cancelled 18 Airports Closed
